டுபாயில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்கு 180 இற்கும் மேற்பட்ட பயணிகளுடன் பறந்த ஃப்ளைதுபாய் விமானத்தில், ஓமன் நாட்டை சேர்ந்த உதவி விமானி நடத்தியத் தாக்குதலை இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கேப்டன் தீரத்துடன் எதிர்கொண்டு முறியடித்துள்ளார். 9/11 பாணி தாக்குதலைப் போன்ற இந்த பயங்கரவாத முயற்சியைத் தடுத்து, விமானத்தை ஆபத்தின்றி தரை இறக்கிய இந்திய விமானிக்கு பாராட்டுகள் குவிகின்றன
விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது, ஓமன் நாட்டைச் சேர்ந்த உதவி விமானி திடீரென காக்பிட்டைப் பூட்டிவிட்டு, கேப்டன் சுமித் மச்சார் மீது கத்தியால் தாக்குதல் நடத்தியுள்ளார். விமானத்தைக் கீழே மோதி விபத்துக்குள்ளாக்க உதவி விமானி முயன்றதாகக் கூறப்படுகிறது. படு காயமடைந்த நிலையிலும் கேப்டன் சுமித், உதவி விமானியை எதிர்த்து தைரியமாக சண்டையிட்டு, விமானத்தைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயன்றுள்ளார்.
விமானம் திடீரென கீழ்நோக்கி சரிந்ததை அடுத்து, காக்பிட்டில் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த பயணிகளும், மாற்று விமானிகளும் காக்பிட் கதவைத் திறந்து தாக்குதல் நடத்திய உதவி விமானியை மடக்கிப் பிடித்தனர். இதன் மூலம் விமானம் சவூதி அரேபியாவின் தபூக் விமான நிலையத்தில் அவசரமாகத் தரை இறக்கப்பட்டது.
குஜராத்தைச் சேர்ந்த கேப்டன் சுமித் மச்சார், முன்னதாக ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தில் 11 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். காயமடைந்த சுமித் மச்சாருக்கு தபூக் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சாதுரியமாக செயல்பட்டு 180-க்கும் மேற்பட்ட பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய இந்திய விமானிக்கு உலகளவில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
இதுகுறித்து ஐக்கிய நாடுகள் சபைக்கான இஸ்ரேல் தூதர் டேனி டானன் கூறுகையில், இஸ்ரேல் நோக்கி சென்ற ப்ளை துபாய் விமானத்தை திசை திருப்பி, பயணிகளை பாதுகாக்க சிங்கத்தை போல போராடிய ஒரு வீரமிக்க விமானி என கேப்டன் ஸ்மித் மச்சாரை பாராட்டியுள்ளார்.
மேலும் அவர், துபாயில் இருந்து வந்த விமானத்தில் இஸ்ரேலிய பயணிகளை, பேரழிவில் இருந்து தடுக்கும் வகையில், சமயோசித புத்தியையும், அசாதாரணமான மன உறுதியையும் இந்திய விமானி வெளிப்படுத்தினார் என்றும் தெரிவித்துள்ளார்.
