ஓமன் துணை விமானியின் 3ஆயிரம் தீவிரவாத பதிவுகள் – வெளியானது திடுக்கிடும் தகவல்

விமான நடுவானில் பறந்தபோது இந்திய விமானியை தாக்கிய ஓமன் நாட்டைச் சேர்ந்த துணை விமானியின் தீவிரவாத பின்னணி குறித்த திடுக்கிடும் தகவல்கள் அம்பலமாகியுள்ளன.

கடந்த செப். 30ஆம் திகதி துபாயில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்கு ‘பிளைதுபாய்’ விமானம் புறப்பட்டுச் சென்றது. அப்போது நடுவானில் பறந்த விமானத்தின் ‘காக்பிட்’ அறைக்குள், ஓமன் நாட்டைச் சேர்ந்த துணை விமானி திடீரென புகுந்து இந்திய கேப்டன் ஸ்மித் மச்சார் மீது கொடூர தாக்குதல் நடத்தினார்.

பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் உடனடியாக விரைந்து வந்து அந்த வெறிச்செயலில் ஈடுபட்ட துணை விமானியை மடக்கிப் பிடித்து கட்டுப்படுத்தினர். இதனால் 178 பயணிகள் மற்றும் விமானிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்த பயங்கர சம்பவம் குறித்து சர்வதேச அளவில் தீவிர விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.

இந்நிலையில், கொடூர குற்றவாளியான துணை விமானி குறித்து சம்பவம் நடந்து 3 நாட்களுக்கு பின்னர் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. துணை விமானியின் பெயர் ஹமாம் அல்-ஹம்மாமி என்றும், அவரது பின்னணி குறித்து சி.என்.என். செய்தி நிறுவனம் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் ஆய்வு செய்தது.

அதில், அவர் 2021ஆம் மற்றும் 2022ஆம் ஆண்டுகளில் சமூக வலைதளத்தில் வெளியிட்ட சுமார் 3,000 தீவிரவாத பதிவுகளை நீக்கியிருக்கின்றமை கண்டுபிடிக்கப்பட்டது. அந்த பதிவுகளில் பெண்களுக்கு எதிரான கடுமையான ஆணாதிக்க மற்றும் பிற்போக்கு கருத்துகளை அவர் கக்கியுள்ளார். திருமணத்திற்குப் பிறகு பெண்கள் வேலைக்குச் செல்லக் கூடாது என்றும், ‘நிகாப்’ உடை அணிய வேண்டும் என்றும் அவர் நிபந்தனை விதித்துள்ளார். மேலும், ஆண் – பெண் ஒன்றாக வேலை செய்யும் சூழலில் இருந்தால், பெண்கள் பாழாகிவிடுவார்கள் என்றும் விஷமத்தனமாக பதிவிட்டுள்ளார்.

விமானத்தில் தாக்குதல் சம்பவம் நடந்த 9 மணி நேரத்திற்குப் பிறகு, அவரது ‘லிங்க்ட்இன்’ பக்கத்தில் அடுத்தடுத்து பதிவுகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தின.

அதில் போயிங் 737 மேக்ஸ் ரக விமானம் மற்றும் இஸ்ரேல் விமானங்களின் காட்சிகள் இடம்பெற்றிருந்தன. மேலும் 2009ஆம் ஆண்டு 7 சி.ஐ.ஏ. அதிகாரிகள் உட்பட 9 பேரை கொன்ற தற்கொலை படை தீவிரவாதி பலவி மற்றும் அல் கொய்தா இயக்கத்தின் முன்னாள் தலைவர் அய்மன் அல்-ஜவாஹிரி ஆகியோரின் புகைப்படங்களும் அதில் இடம்பெற்றிருந்தன.

இதனுடன் இஸ்லாமிய புனித தலங்களின் படங்களுடன் மரணத்திற்கு ‘அஞ்ச மாட்டோம்’ என்ற வாசகங்களும் பதிவிடப்பட்டிருந்தன. தீவிரவாத அமைப்புகளுடன் அவருக்கு தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் பாதுகாப்பு அமைப்புகள் தீவிரமாக விசாரித்து வருகின்றன.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles