கனரக வாகனம் மோதி ஆசிரியை பலி! – மட்டக்களப்பில் ஆசிரியர் தினத்தில் துயரம்

மட்டக்களப்பில் ஆசிரியர் தினத்தைக் கொண்டாடிவிட்டுப் பாடசாலையிலிருந்து அதிபருடன் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, கனரக வாகனம் மோதிய விபத்தில் ஆசிரியை ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்தச் சம்பவத்தில் அதிபர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.

விபத்தை ஏற்படுத்திய வாகனத்தின் சாரதி தப்பியோடியமையால் அந்தப் பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது.

நேற்று செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு, திமிலைதீவு எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு முன்பாக இந்தத் துயரச் சம்பவம் இடம்பெற்றது.

மட்டக்களப்பு நகர், சூரியா வீதியைச் சேர்ந்தவரும், வலையிறவு த.க. பாடசாலை ஆசிரியையுமான கமலநாதன் மதிவதனி (வயது 58) என்பவரே விபத்தில் உயிரிழந்தார்.

படுகாயமடைந்த பாடசாலை அதிபர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.

பாடசாலையில் இன்று ஆசிரியர் தினத்தைக் கொண்டாடிவிட்டுப் பிற்பகல் 1.30 மணியளவில் பாடசாலை அதிபரின் மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து ஆசிரியை பயணித்துள்ளார். திமிலைதீவு எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு அருகில் மோட்டார் சைக்கிளுக்குப் பின்னால் வந்த கனரக வாகனம் மோதியதில் இருவரும் கீழே விழுந்துள்ளனர். அப்போது ஆசிரியை மீது கனரக வாகனம் ஏறியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

விபத்தையடுத்து கனரக வாகனத்தின் சாரதி வாகனத்தை அங்கேயே விட்டுவிட்டுத் தப்பியோடினார். இதனால் அந்தப் பகுதியில் பொதுமக்கள் ஒன்றுதிரண்டமையால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. பின்னர் பொலிஸார் விரைந்து சென்று கனரக வாகனத்தை மீட்டுச் சென்றனர்.

சம்பவ இடத்துக்கு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிவான் நேரில் சென்று பார்வையிட்டார்.

சடலத்தைப் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துமாறு நீதிவான் உத்தரவிட்டமையையடுத்து சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பிரேத அறையில் ஒப்படைக்கப்பட்டது.

இது தொடர்பாக மட்டக்களப்பு தலைமையகப் போக்குவரத்துப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles