பீகார் கங்கை ஆற்றில் படகு கவிழ்ந்ததில் குழந்தைகள், பெண்கள் உட்பட 14 பேர் பலி!

பீகாரின் வைஷாலி மாவட்டத்தில் உள்ள ராம்பூர் ஷியாம்சந்த் கிராமம் அருகே கங்கையில் பயணிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்த துயரச் சம்பவத்தில் 14 பேர் பரிதாபமாகப் பலியாகினர்.

பீகாரின் வைஷாலி மாவட்டத்திற்கு உட்பட்ட ராகோபூர் தியாரா பகுதியிலிருந்து ராம்பூர் ஷியாம்சந்த பகுதியில் நடைபெற்ற விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சுமார் 20 முதல் 30 பேர் வரை ஒரு படகில் கங்கை ஆற்றைக் கடந்து சென்று கொண்டிருந்தனர் என கூறப்படுகிறது.

நேற்று செவ்வாய்க்கிழமை நள்ளிரவு சென்றுகொண்டிருந்தபோது ​நடு ஆற்றில் எதிர்பாராதவிதமாக படகு நிலைதடுமாறி கவிழ்ந்தது. குழந்தைகள், பெண்கள் என அனைவரும் கூச்சலிட்ட நிலையில், படகில் இருந்த அனைவரும் ஆற்று நீருக்குள் தத்தளித்து உயிரைக் காப்பாற்றிக் கொள்ள முயன்றனர்.

இருப்பினும், இந்த துயரச் சம்பவத்தில் முதற்கட்ட தகவலின் அடிப்படையில் 11 பேர் உயிரிழந்தனர் என வைஷாலி மாவட்ட ஆட்சியர் வர்ஷா சிங் உறுதிப்படுத்தினார்.

ஆற்றில் மூழ்கி பலர் மாயமாகியுள்ளதால், அவர்களைத் தேடும் பணிகளும் மீட்பு நடவடிக்கைகளும் இரவிலிருந்து தீவிரமாக நடைபெற்று வருவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மற்றும் உள்ளூர் காவல் துறையினர், கிராம மக்களின் உதவியுடன் தீவிர மீட்புப் பணியில் இறங்கினர்.

ஆற்று நீரில் மூழ்கி குழந்தைகள், பெண்கள் உள்பட 14 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் மாயமானவர்களைத் தேடும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்தச் சம்பவத்தில் மீட்கப்பட்டவர்களுக்கு ஹாஜிபூர் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்துக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, பலியானோரின் குடும்பங்களுக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ. 50 ஆயிரமும் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

ராகோபூர் எம்.எல்.ஏவும், ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்.ஜே.டி.) தலைவருமான தேஜஸ்வி யாதவ் அளித்த தகவலின்படி, 6 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதே வேளையில் மேலும் 3 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர் என்றார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles