ஹோர்முஸ் நீரிணையில் வைக்கப்பட்டிருந்த கண்ணிவெடியில் சிக்கிய சரக்குக் கப்பல் ஒன்று மூழ்கியதாக, ஈரானின் புரட்சிகர காவல் படை அறிவித்துள்ளது.
ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் போரால், சர்வதேச எரிபொருள் விநியோகத்தின் முக்கிய பாதையான ஹோர்முஸ் நீரிணையைக் கடக்கும் கப்பல்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றன.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கப்பல்களும், அந்நாடுகளின் கூட்டாளிகளின் கப்பல்களும் ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்வதற்கு ஈரான் அரசு தடைவிதித்துள்ளது. இதையடுத்து, ஹோர்முஸ் நீரிணையின் குறிப்பிட்ட சில பாதைகளில் கப்பல்களைத் தகர்க்கும் கண்ணிவெடிகளை ஈரானிய படைகள் வைத்துள்ளன.
இந்த நிலையில், ஹோர்முஸ் நீரிணையில் ஈரானின் அனுமதியின்றி சட்டவிரோதமான பாதையில் செல்ல முயன்ற சரக்குக் கப்பல் ஒன்று இன்று புதன்கிழமை காலை, அங்குள்ள கண்ணிவெடியில் மோதி கடலில் மூழ்கியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில், சட்டவிரோதமாக அபாயம் மிகுந்த பாதையின் வழியாக சுமார் 2,500 கொள்கலன்களை ஏற்றிச் சென்ற அந்தக் கப்பல் கண்ணிவெடியில் மோதி தீப்பிடித்து கடலில் மூழ்கியதாக, ஈரானின் புரட்சிகர காவல் படையின் கடற்படைப் பிரிவு அறிவித்துள்ளது.
அமெரிக்காவுடனான போர் தொடங்கியதில் இருந்து கப்பல் ஒன்று மூழ்கியதாக, ஈரான் அறிவித்துள்ளது இதுவே முதல்முறை. இருப்பினும், இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட கப்பல் மற்றும் அதன் மாலுமிகளின் நிலை குறித்து இதுவரை எந்தவொரு தகவலும் வெளியிடப்படவில்லை.
