கனடாவின் கலகரி நகரின் ஈகிள்ஸ் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்து மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளதுடன், 19 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த விபத்தில் இரண்டு மாநகரப் பேருந்துகள் உட்பட மொத்தம் எட்டு வாகனங்கள் சிக்கியுள்ளன என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.
நேற்று வியாழக்கிழமை பிற்பகல் 1 மணியளவில், சடில்டவுன் வட்டப் பகுதியில் உள்ள 800ஆவது தொகுதியில் வாகனத் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகக் காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்தது.
வட திசையை நோக்கிச் சென்ற பேருந்து ஒன்று வாகனம் ஒன்றின் மீது மோதியுள்ளது. இதனால் அந்த வாகனம் அருகில் இருந்த மற்றொரு கார் மீது மோதியதுடன், ஒரு கியூப் வான் மீதும் மோதி மற்றொரு பேருந்துடனும் மோதி விபத்துக்குள்ளானது.
இரண்டாவது பேருந்து மோதிய வேகத்தில் சாலையைக் கடந்து சென்று மேலும் மூன்று வாகனங்கள் மீது மோதியது. இந்தக் கோர மோதலின் தாக்கத்தால் பேருந்து தீப்பற்றி எரிந்ததுடன், கரும்புகை அப்பகுதி முழுவதும் சூழ்ந்தது.
அருகில் இருந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் உடனடியாக விரைந்து வந்து இரண்டு பேருந்துகளிலும் பற்றிய தீயை அணைத்தனர். விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர், குறைந்தது 19 பேர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்களில் 10 பேர் உடனடியாக பல்வேறு மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். மற்ற 5 பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
பணியில் இருந்த காவல் துறை அதிகாரி ஒருவரும் சிறு காயங்களுடன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
பேருந்து ஒன்றின் ஓட்டுநர் உடனடியாக தப்பியோடியுள்ளார் எனவும் மற்றொரு பேருந்தின் ஓட்டுநர் உள்ளே சிக்கிக் கொண்டதால் அவசரக் குழுவினரால் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதாகவும் போக்குவரத்து யூனியன் தலைவர் தெரிவித்தார்.
