இலங்கையில் இருந்து கடல் வழியாகச் சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்குள் நுழைய முற்பட்ட இலங்கையர்கள் மூவர் உட்பட நால்வர் இன்று அதிகாலை தமிழகக் கியூ பிரிவுப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
டில்லிக்குச் செல்லும் நோக்கில் கடல் வழியாக இரகசியப் பயணத்தை மேற்கொண்டு, தமிழகப் பாம்பன் கடற்கரையை அடைந்தபோதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கையின் மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் கண்டி மாவட்டங்களைச் சேர்ந்த மூவர் தரை வழியாக மன்னாரைச் சென்றடைந்துள்ளனர்.
மன்னாரில் இருந்து தமிழகத்தைச் சேர்ந்த படகோட்டி ஒருவருக்கு ஜி.பி.எஸ். நேரலை இருப்பிடத் தகவலை அனுப்பியுள்ளனர்.
அந்த ஜி.பி.எஸ். தகவலை மையமாகக் கொண்டு தமிழகத்தில் இருந்து வந்த படகு, இலங்கையர்கள் மூவரையும் ஏற்றிச் சென்றுள்ளது.
படகு இன்று அதிகாலை இராமேஸ்வரம் பாம்பன் கடற்கரையிலிருந்து சுமார் ஒரு கிலோமீற்றர் தொலைவை அண்மித்தபோது, கியூ பிரிவு பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டு அனைவரும் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட இலங்கையர்கள் மூவரும் இந்தியாவில் டில்லிக்குச் சென்று, அங்கு நபர் ஒருவரின் உதவியுடன் கடவுச்சீட்டுகளைப் பெற்று லண்டன் பயணிக்கும் நோக்கிலேயே இந்தத் திருட்டுத்தனமான பயணத்தை மேற்கொண்டனர் என்று தமிழகப் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கைது செய்யப்பட்ட அனைவரும் கியூ பிரிவினரால் மரைன் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
