அமெரிக்க இடைக்கால தேர்தல், ஜோர்ஜியா மாகாணத்தில் ஜனநாயகக் கட்சி எம்.பி. ஜோன் ஓசாஃப் (39) மீண்டும் வெற்றிபெற்று தனது செனட்டர் பதவியைத் தக்கவைத்துக் கொண்டுள்ளார்.
ட்ரம்ப் நிர்வாகத்தின் மீதான கடுமையான விமர்சனங்களாலும், முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவை நினைவூட்டும் ஆளுமையாலும் கவனம் ஈர்த்துள்ள அவர், 2028 அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான முக்கிய போட்டியாளராக உருவெடுத்துள்ளார்.
2021இல் மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வென்றபோது, அவரை ‘தற்செயலான செனட்டர்’ என அரசியல் நிபுணர்கள் அழைத்தனர். ஆனால், ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, 2024இல் ட்ரம்ப் வென்ற மாநிலத்திலேயே தனது இடத்தைத் தக்கவைத்துள்ளார்.
தேர்தல் பிரச்சாரத்தில் ட்ரம்ப்பை கடுமையாக விமர்சித்து அவர் கவனம் ஈர்த்தார். அதிபரும் அவரது குடும்பமும் ஊழலில் ஈடுபடுவதாகவும், அவரது அரசு ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தலாக உள்ளதாகவும் குற்றம்சாட்டினார். ட்ரம்ப்பையும் அவரது ஆதரவாளர்களையும் ‘எப்ஸ்டீன் வர்க்கம், மார்-எ-லாகோ (புளோரிடாவில் உள்ள ட்ரம்ப்பின் சொகுசு விடுதி மற்றும் இல்லம்) மாஃபியா’ என அவர் குறிப்பிட்ட காணொலிகள் வலைதளங்களில் வைரலாகின.
வெற்றிக்குப் பிறகு அட்லாண்டாவில் பேசிய ஓசாஃப், ட்ரம்ப்பை தோல்வியடைந்த அதிபர் என விமர்சித்தார். ஊழலையும் திறமையின்மையையும் மக்கள் நிராகரித்துவிட்டதாகவும், ட்ரம்ப்பின் தீமையைக் கட்டுப்படுத்துவதோடு அதன் ஆழமான பாதிப்புகளைக் குணப்படுத்துவதே நமது பணி என்றும் அவர் கூறினார்.
சிறந்த பேச்சுத்திறன், மிதமான – முற்போக்குக் கொள்கை மற்றும் சட்டைக் கைகளை மடித்துவிட்டுப் பேசும் தோற்றம் ஆகியவற்றால் ஓசாஃப், பராக் ஒபாமாவுடன் (அடுத்த பராக் ஒபாமா) ஒப்பிடப்படுகிறார்.
மூத்த தலைவர்கள் நிறைந்த அமெரிக்க அரசியலில் ஓசாஃப் ஒரு இளமையான மாற்றாகப் பார்க்கப்படுவதாகப் பத்திரிகையாளர் எஸ்ரா க்ளீன் குறிப்பிட்டுள்ளார். இடைக்காலத் தேர்தல் பிரச்சாரத்தில் ஓசாஃப்பைப் பாராட்டிய ஒபாமா, இருவருக்குமே வழிகாட்டியான ஜான் லூயிஸிடமிருந்து நல்ல மாற்றத்துக்காகக் குரல் கொடுக்கும் வழியை அவர் கற்றுக்கொண்டதாகக் குறிப்பிட்டார்.
