இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு இந்திய குடியேற்ற விதிகளில் தளர்வு

இந்தியாவில் வசிக்கும் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த சிறுபான்மையினர் மற்றும் இலங்கைத் தமிழ் அகதிகள் உள்ளிட்ட வெளிநாட்டினருக்கான கடவுச்சீட்டு மற்றும் விசா நடைமுறைகளில் இந்திய மத்திய அரசு தளர்வுகளை அறிவித்துள்ளது.

இதற்கான உத்தரவை இந்திய மத்திய உள்துறை அமைச்சு வெளியிட்டுள்ளது.

இதன்படி, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் நாடுகளைச் சேர்ந்த சிறுபான்மையினர், இலங்கைத் தமிழ் அகதிகள் மற்றும் திபெத்தியர்கள் உள்ளிட்ட சில பிரிவினருக்கு குடியேற்றம் தொடர்பான ஆவண நடைமுறைகளில் விலக்குகள் வழங்கப்பட்டுள்ளன.

குறிப்பாக, மத ரீதியான துன்புறுத்தல்களுக்கு அஞ்சி இந்தியாவுக்கு வந்த பாகிஸ்தானைச் சேர்ந்த இந்துக்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், கிறிஸ்தவர்கள், சமணர்கள் மற்றும் பார்சிகள் ஆகியோருக்கு இந்தச் சலுகை வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 2024ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் திகதிக்கு முன்னர் இந்தியாவுக்குள் நுழைந்த இவர்கள், செல்லுபடியாகும் கடவுச்சீட்டு அல்லது பயண ஆவணங்கள் இல்லாமல் இருந்தாலும், அல்லது காலாவதியான ஆவணங்களைக் கொண்டிருந்தாலும் புதிய உத்தரவின் கீழ் நிவாரணம் பெற முடியும்.

எனினும், இந்தியாவில் தொடர்ந்து தங்கியிருப்பதற்கு உரிய வகையிலான விசாவைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று, பாகிஸ்தானிய அரசாங்கத்தால் வழங்கப்படும் கணினிமயப்படுத்தப்பட்ட தேசிய அடையாள அட்டை இல்லாத காரணத்தால் தமது கடவுச்சீட்டைப் புதுப்பிக்க முடியாமல், நிரந்தரமாக இந்தியாவில் வசிக்கும் நோக்குடன் 2009ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் திகதிக்கு முன்னர் இந்தியாவுக்குள் நுழைந்த பாகிஸ்தான் பிரஜைகளுக்கும் இந்தத் தளர்வு பொருந்தும்.

மேலும், 2015ஆம் ஆண்டு ஜனவரி 9ஆம் திகதி வரை இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள இலங்கைத் தமிழ் அகதிகளுக்கும் குறிப்பிட்ட ஆவண நடைமுறைகளிலிருந்து விலக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கு வந்த திபெத்தியர்களுக்கும் குறிப்பிட்ட நிபந்தனைகளின் அடிப்படையில் இச்சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.

இதேவேளை, நேபாளம் மற்றும் பூட்டான் பிரஜைகளுக்கான பயணம் மற்றும் அடையாள உறுதிப்படுத்தல் நடைமுறைகளும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இதன்படி, விசா கையேட்டில் குறிப்பிடப்பட்டுள்ள அங்கீகரிக்கப்பட்ட ஆவணங்களில் ஏதேனும் ஒன்றைச் சமர்ப்பித்து அவர்கள் இந்தியாவுக்குள் நுழையவும் வெளியேறவும் முடியும்.

எனினும், நேபாளம் அல்லது பூட்டானைத் தவிர்ந்த வேறு நாடுகளுக்குச் செல்வதற்கும் அங்கிருந்து இந்தியாவுக்குத் திரும்புவதற்கும் செல்லுபடியாகும் கடவுச்சீட்டு அவசியமாகும்.

மேலும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்களாக இருந்து பின்னர் மலேசியா அல்லது சிங்கப்பூர் குடியுரிமை பெற்ற சிலருக்கும், குறிப்பிட்ட நிபந்தனைகளின் கீழ் கடவுச்சீட்டு மற்றும் விசா நடைமுறைகளில் விலக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்தத் தளர்வுகள் அனைத்தும் இந்தியாவின் குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினர் தொடர்பான விலக்கு உத்தரவு 2026இல் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களின் அடிப்படையில் அறிவிக்கப்பட்டுள்ளன.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles