Saturday, September 21, 2024
Homeசாவர்க்கரா... சாவித்திரிபாயா.. : வரலாற்றை திரித்து பேசிய சுதா கொங்கரா வருத்தம்..!

சாவர்க்கரா… சாவித்திரிபாயா.. : வரலாற்றை திரித்து பேசிய சுதா கொங்கரா வருத்தம்..!

அண்மையில் தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு இயக்குநர் சுதா கொங்கரா பேட்டி அளித்தார். அப்போது சாவர்க்கர் குறித்து அவர் பேசிய விஷயங்கள் சமூக வலைத்தளங்களில் பேசு பொருளாகின.

“நான் அடிப்படையிலேயே வரலாறு மாணவி. நான் வுமன் ஸ்டடிஸ் படிப்பு படித்துக்கொண்டு இருக்கும் போது, எனக்கு பாடம் எடுத்த ஆசிரியர் ஒருவர், சாவர்க்கர் கதையை சொன்னார். அதாவது, சாவர்க்கர் மிகப் பெரிய தலைவராக இருந்த போது, அவர் தன்னுடைய மனைவியை நீ படிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்திக் கொண்டே இருந்தார்.

ஆனால் அவரது மனைவிக்கு வீட்டில் இருக்க வேண்டும், வீட்டில் உள்ள வேலைகளை கவனித்துக் கொண்டு இல்லத்தரசியாக தன்னுடைய வாழ்க்கையை கொண்டு செல்ல வேண்டும் என்பதுதான் ஆசையாக இருக்கும்.

அந்த நேரத்தில் பெண்கள் யாரும் படிக்க மாட்டார்கள். அவர் படிக்கச் செல்லும் போது, தெருவில் பலர் அவரை அவமானப்படுத்துவார்கள். இதனையடுத்து, அவர் நான் பள்ளிக்குச் செல்ல மாட்டேன் என்று சொல்லி, வீட்டிற்கு வந்து விடுவார்.

இதை கவனித்த சாவார்க்கர், நான் உன்னை அழைத்துச் செல்கிறேன். யார் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம் என்று, மறுபடியும் அவரது கையைப் பிடித்து பள்ளிக்கு அழைத்துச் செல்வார். இது சரியா தவறா…? என்ற கேள்வியை கேட்டேன். என்னுடைய தாத்தா, சகுந்தலாவின் கதையை சொல்லும் பொழுதும், எனக்கு பல கேள்விகள் எழுந்தன. அவர் ராமர் சீதையோடு வனவாசம் சென்றதை, மிகவும் பக்தி மயமாக சொல்லிக் கொண்டிருப்பார். அவரிடம் நான் பல கேள்விகளை எழுப்புவேன்.

ஆண், பெண் விவகாரத்தில் ஏன் அங்கு வித்தியாசம் என்ற ஒன்று வருகிறது. நான் உடல் ரீதியான வித்தியாசத்தை சொல்லவே இல்லை. எனக்கு அது தேவையே கிடையாது. ஒரு ஆண் அளவுக்கு ஒரு பெண்ணுக்கு வலிமை இல்லை என்பது ஒத்துக்கொள்கிறோம்.. ஆனால், நான் ஒரு பெண் என்பதாலேயே நான் தாழ்வு மனப்பான்மையோடு இருக்கிறேன் என்று சொல்வதெல்லாம் கேள்விக்கு உட்பட்டது. இந்த மாதிரியான கேள்விகளை என்னுடைய படங்களில் எந்த அளவுக்கு எழுப்ப முடியுமோ, அந்த அளவுக்கு நான் எழுப்புவேன்” என்று சுதா கொங்கரா பேசியிருந்தார்.

இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் ஜோதிபா பூலே மற்றும் சாவித்திரி பாய் புலேவின் வரலாற்றை சாவர்க்கரின் வரலாறு என சுதா கொங்கரா திரித்து பேசியதாக விமர்சித்தனர்.

ஜோதிபா பூலே தனது மனைவி சாவித்திரிபாயை படிக்க வைத்தார். அப்போது அவர்கள் இருவரும் அந்த பிற்போக்கு சமூகத்தால் ஒடுக்கப்பட்டனர். அந்த ஒடுக்குமுறையை மீறி இந்தியாவின் முதல் பெண் ஆசிரியராக சாவித்ரிபாய் உருவெடுத்தார். இதுதான் வரலாறு என்று பலரும் சுதா கொங்கராவை சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் விமர்சித்தனர்.

இந்நிலையில் ஜோதிபா பூலே மற்றும் சாவித்திரிபாய் புலேவின் வரலாற்றை சாவர்க்கரின் வரலாறு என மாற்றி கூறியதற்கு சுதா கொங்கரா மன்னிப்பு கேட்டுள்ளார்.

இது தொடர்பான அவரது எக்ஸ் பதிவில், “என் தவறுக்கு வருந்துகிறேன். எனது பதினேழாவது வயதில் பெண் கல்வி குறித்த எனது வகுப்பு ஒன்றில் எனது ஆசிரியர் சொன்னதை வைத்து நான் அந்த நேர்முகத்தில் பேசியிருந்தேன். ஒரு வரலாற்று மாணவியாக அதன் உண்மைத் தன்மையை நான் சோதித்திருக்க வேண்டும். அது என் பக்கத்தில் தவறுதான். எதிர்காலத்தில் அப்படி நேராது என்று உறுதியளிக்கிறேன். மற்றபடி ஒருவருடைய உன்னதமான செயலுக்கான புகழை இன்னொருவருக்குத் தர வேண்டும் என்ற நோக்கம் எனக்கு இல்லை. எனது பேச்சில் இருந்த தகவல் பிழையை சுட்டிக் காட்டியவர்களுக்கு நன்றி. ஜோதிபா மற்றும் சாவித்திரிபாய் புலே ஆகியோருக்கு என்றும் தலை வணங்குகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments