Monday, September 23, 2024
Homeகொழும்பு துறைமுகத்திற்கு கிடைத்துள்ள அங்கீகாரம்..!

கொழும்பு துறைமுகத்திற்கு கிடைத்துள்ள அங்கீகாரம்..!

2024 ஆம் ஆண்டில் 23.6% எனும் வேகமான வளர்ச்சி விகிதத்தைப் பதிவுசெய்ததன் மூலம் கொழும்பு துறைமுகம் செயல்பாட்டுச் செயல்திறனில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளது.

கப்பல் துறையின் முன்னணி ஆராய்ச்சி வெளியீடான Alphaliner, உலகின் வேகமாக வளரும் துறைமுகமாக கொழும்பு துறைமுகத்தை முதல் காலாண்டில் குறிப்பிட்டுள்ளதாக கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சின் செயலாளர் கே. டி. எஸ்.ருவன்சந்திர தெரிவித்தார்.

அத்துடன், 2024ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் கொழும்பு துறைமுகம்,50 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை ஈட்டியுள்ளதாக சுட்டிக்காட்டிய அவர், கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு தொழிற்சங்க நடவடிக்கைகள் அந்த முன்னேற்றத்தை எட்டுவதற்குத் தடையாக அமையவில்லை எனவும் செயலாளர் தெரிவித்தார்.

இரண்டு வருட முன்னேற்றம் தொடர்பில் ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (29) நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சின் செயலாளர் கே. டி.எஸ்.ருவன்சந்திர இதனைக் குறிப்பிட்டார்.

அமைச்சின் செயலாளர் கே. டி. எஸ். ருவன்சந்திர மேலும் கூறியதாவது,

“கொழும்பு துறைமுகத்தின் செயற்பாடு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளது . கொழும்பு துறைமுகம் 2024 ஆம் ஆண்டில் 23.6% சிறந்த வளர்ச்சி விகிதத்தை பதிவு செய்துள்ளது. அதன்படி, கப்பல் துறையின் முன்னணி ஆராய்ச்சி வெளியீடான Alphaliner, 2024 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் உலகின் சிறந்த வளர்ச்சியடைந்த துறைமுகமாக கொழும்பு துறைமுகத்தை அறிவித்துள்ளது.

பல்வேறு தொழிற்சங்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் போதே இந்த முன்னேற்றத்தை அடைந்தோம். ஆனால் அவை எமது பணிக்கு இடையூறாக அமையவில்லை. 2023ஆம் ஆண்டில் இலங்கை துறைமுக அதிகாரசபை 100 மில்லியன் அமெரிக்க டொலர் இலாபத்தைப் பதிவுசெய்துள்ளதுடன் 2024ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் மாத்திரம் 50 மில்லியன் அமெரிக்க டொலர் இலாபம் ஈட்டப்பட்டுள்ளது.

நான்கு முனையங்களும் இந்த நடவடிக்கைகளுக்கு பங்களித்துள்ளன என்று கூற வேண்டும். இந்த டெர்மினல்களின் செயல்பாட்டு திறனை மேம்படுத்தும் பணியும் தற்போது நடைபெற்று வருகிறது. அதன்படி, ECT மற்றும் மேற்கு முனையத்தின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன, மேலும் மேற்கு முனையத்தின் செயல்பாடு பெப்ரவரி 2025 இல் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், கிழக்கு முனையம் மற்றும் வடக்கு துறைமுகத்தின் அபிவிருத்தியும் மேற்கொள்ளப்படுகிறது.

அத்துடன், திருகோணமலை, காலி, காங்கேசந்துறை ஆகிய துறைமுகங்களிலும் அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், இந்தியாவிலிருந்து பயணிகள் படகு சேவையானது ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் காங்கேசந்துறை துறைமுகத்தில் புதிதாகக் கட்டப்பட்ட முனையம் படகுச் சேவை நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படுகிறது.

2023 உடன் ஒப்பிடும்போது விமான சேவைகளும் 25% முன்னேற்றமடைந்துள்ளன. இங்கு, பயணிகள் மற்றும் சரக்கு செயல்பாடுகள் கணிசமாக அதிகரித்துள்ளது மற்றும் விமானங்களின் வருகை 2023 இல் 36 இல் இருந்து ஜூலை 2024 க்குள் 46 ஆக அதிகரித்துள்ளது” என்று தெரிவித்தார்.

விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் (இலங்கை) (தனியார்) நிறுவனத்தின் தலைவர் அதுல கல்கெட்டிய,

“2024 ஜூலை மாத்திற்குள், 4.3 மில்லியன் சர்வதேச பயண பிரயாணங்கள் நடந்துள்ளன. அடுத்த ஆறு மாத இறுதியில் அந்த எண்ணிக்கை சுமார் 9 மில்லியனாக உயரும் என்று நாங்கள் நம்புகிறோம். அந்த எண்ணிக்கை ஜூலை 2023 உடன் ஒப்பிடும் போது, ​​26.10% வளர்ச்சியாக உள்ளது.

மேலும், சர்வதேச விமானப் போக்குவரத்தின் எண்ணிக்கை ஜூன் 2023 உடன் ஒப்பிடும்போது ஜூன் 2024 க்குள் 24.50% அதிகரித்துள்ளது. மேலும் விமான சரக்கு போக்குவரத்தின் எண்ணிக்கையும் 28.96% அதிகரித்துள்ளது.

எமது முனையத்தின் மூலம் 2018 இல் சுமார் 10.8 மில்லியன் விமானப் பயணிகள், பயணங்களை மேற்கொண்டுள்ளனர். ஆனால் வசதிகளை செய்து கொடுப்பதில் சில சிக்கல்கள் உள்ளன. எனவே, 8 முதல் 9 மில்லியன் பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்த பல குறுகிய கால மற்றும் நீண்ட கால நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

முதலாவதாக இடைநிலை முனையத்தின் ஊடாக புறப்படும் பகுதியை மேம்படுத்த விலைமனுகோரத் திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், புதிய கட்டிடத்தில் கட்டப்படும் புறப்படும் பகுதியில் ( Departure Area) மேலும் 30 கவுண்டர்கள் உருவாக்கப்படும், மேலும் தலா 4 வருகை மற்றும் புறப்படும் இலத்திரனியல் கேட்கள் நிர்மாணிக்கப்படும். குடிவரவு மற்றும் குடியகல்வு பணிகள் விரைவுபடுத்தப்படும்.

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கான உத்தேச இரண்டாவது முனையத்தின் நிர்மாணப் பணிகள் மிக விரைவில் மீள ஆரம்பிக்கப்படும் என நம்புகிறோம். இது தொடர்பாக நாம் தற்போது JICA உடன் கலந்துரையாடி வருகிறோம், அவர்கள் உறுதியளித்தபடி அடுத்த மாதத்திற்குள் தேவையான கடன் வசதியை வழங்குவார்கள்.

இதேவேளை, சம்பளப் பிரச்சினை காரணமாக விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் வெளியேறியமை தொடர்பான விவகாரம் அரசாங்கத்தின் தலையீட்டில் தீர்க்கப்பட்டுள்ளது. எனினும் சுமார் 80 விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர் . எனவே, புதிய விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்களை நியமிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

தற்போது 25க்கும் மேற்பட்டோர் கொண்ட குழுவை நியமித்து அவர்களுக்கு பயிற்சி அளித்து பணிக்கு நியமித்துள்ளோம். மற்றொரு குழுவிற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன” என்றும் அவர் தெரிவித்தார்.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments