யாழ். பல்கலைக்கழகச் சித்த மருத்துவபீட விரிவுரையாளர் தயாளினி திலீபன், தனது சொந்த மருமகனாலேயே கொலை செய்யப்பட்டுக் காற்றாலைப் பகுதியில் வீசப்பட்டிருக்கும் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த வியாழக்கிழமை (19) யாழ்ப்பாணம், பாண்டியன்தாழ்வுப் பகுதியில் உள்ள விரிவுரையாளரின் வீட்டிலிருந்து, குறித்த பெண் விரிவுரையாளரும் அவரது மகளும் கடத்தப்பட்டதாக , விரிவுரையாளரின் மகன் பொலிஸில் முறைப்பாடு ஒன்றைச் செய்திருந்தார்.
முறைப்பாட்டின் அடிப்படையில் கடத்தப்பட்ட விரிவுரையாளரின் வீட்டுக்கு விரைந்த பொலிஸாருக்கு அங்கே காத்திருந்தது அதிர்ச்சி; வீட்டின் ஓடுகள் கழற்றப்பட்டிருந்ததுடன், கயிறு மூலம் யாரோ தப்பிச் சென்றதற்கான தடயங்களும், அறுந்து கிடந்த தலைமுடிகளும் சிக்கின.
உடனடியாக விசாரணைகளை முடுக்கிவிட்ட பொலிஸார், நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் வேட்டையைத் தொடங்கினர். பரந்தன் பகுதியில் உள்ள ஏ.டி.எம் இயந்திரத்தில் சந்தேகநபர் பணம் எடுத்தமை உறுதியானது. அதனைத் தொடர்ந்து, திருகோணமலைப் பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கியூ.ஆர் குறியீட்டைப் பயன்படுத்தி வாகனத்திற்கு எரிபொருள் நிரப்பியமையும் கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த நிலையத்தின் சிசிடிவி காட்சிகளை ஆதாரமாகக் கொண்டு விரட்டிச் சென்ற பொலிஸார், நேற்று (20) திருகோணமலையில் வைத்து விரிவுரையாளரின் 19 வயது மகளையும், அவரது கணவனையும் அதிரடியாகக் கைது செய்தனர்.
யாழ்ப்பாணம் அழைத்து வரப்பட்ட இருவரிடமும் நடத்தப்பட்ட கிடுக்கிப்பிடி விசாரணையில், மருமகனின் கொடூரத் தாக்குதலுக்கு விரிவுரையாளர் தயாளினி பலியானமை அம்பலமானது. கொலையை மறைக்கத் திட்டமிட்ட இருவரும், கடத்தல் நாடகமாடி, சடலத்தைத் தனங்களப்பு காற்றாலைப் பகுதிக்கு எடுத்துச் சென்று அங்கே வீசிவிட்டுத் தப்பியோடியதை ஒப்புக்கொண்டுள்ளனர்.
ஒரு பல்கலைக்கழகப் பேராசிரியை தனது குடும்ப உறுப்பினராலேயே இவ்வளவு கோரமாகக் கொல்லப்பட்ட சம்பவம் யாழ். மண்ணையே உலுக்கியுள்ளது. தற்போது சடலத்தை மீட்பதற்கான தீவிர தேடுதல் பணிகளில் பொலிஸார் களமிறங்கியுள்ளனர்.
