சிங்கப்பூரில் மோசடிக் கும்பல்களுக்கு உதவியதாக மேலும் ஒரு மலேசியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மோசடியில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 24) அந்த 34 வயதுடைய ஆண் ஒருவர் கைதுசெய்யப்பட்டார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சிங்கப்பூரில் மோசடிக் கும்பல்களுக்கு உதவியதாக மார்ச் மாதம் முதல் இதுவரை 17 மலேசியர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
மோசடியில் சிக்கி ஏமாறுவோரிடம் இருந்து பணத்தையும் மதிப்புமிக்க பொருள்களையும் பெற்று அவற்றை மோசடிக் கும்பல்களிடம் சேர்ப்பதற்காக சிங்கப்பூருக்கு வரும் மலேசியர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அது கூறியது.
குற்றச் செயல்களிலிருந்து பெறப்பட்ட பலன்களைத் தக்கவைத்துக்கொள்ள மற்றொருவருக்கு உதவியதாகவும் அவர்மீது குற்றம் சுமத்தப்படலாம். அந்தக் குற்றம் நிரூபிக்கப்பட்டால் பத்தாண்டு வரையிலான சிறைத்தண்டனையோ அதிகபட்சம் $500,000 அபராதமோ இரண்டுமோ விதிக்கப்படலாம்.
ஆகக் கடைசியாக, ஏப்ரல் 14ஆம் திகதி பொலிஸாருக்கு முறைப்பாடு ஒன்று வந்தது. எம்1 தொலைத்தொடர்பு நிறுவனத்தில் இருந்து பேசுவதாகக் குறிப்பிட்ட, முன்பின் தெரியாத நபரிடம் இருந்து தமக்கு அழைப்பு வந்ததாக, மோசடியில் சிக்கியவர் ஒருவர் முறைப்பாடு செய்துள்ளார்.
