பெப்ரவரி 28-ஆம் தேதி தொடங்கிய போர் தற்போது முடிவடைந்துவிட்டது. ஆனால், ஈரானுடனான மோதலை அமெரிக்கா விரைவில் முடித்துவிடாது என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஈரான் அணு ஆயுதங்கள் பெற அனுமதிக்கப்படக்கூடாது என்றும் அவர் மீண்டும் தெரிவித்துள்ளார்.
1973ஆம் ஆண்டின் அமெரிக்க போர் அதிகார சட்டத்தின்படி, நாடாளுமன்றத்தின் ஒப்புதல் இல்லாமல் அதிபரால் 60 நாட்கள் வரை இராணுவ நடவடிக்கை மேற்கொள்ள முடியும். அதன்பிறகு அந்த நடவடிக்கையை நிறுத்த வேண்டும் அல்லது நாடாளுமன்ற ஒப்புதல் பெற வேண்டும். மேலும் அந்த சூழ்நிலைக்கு அவசர இராணுவ பாதுகாப்பு தேவைப்பட்டால் கூடுதல் 30 நாட்கள் கோரலாம்.
ஆனால், இந்தப் போரை தொடர்வதற்கு அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களின் அனுமதி தேவையில்லை என்று ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
‘பெப்ரவரி 28-ஆம் தேதி தொடங்கிய போர் தற்போது முடிவடைந்துவிட்டது. ஆனால், ஈரானுடனான மோதலை அமெரிக்கா விரைவில் முடித்துவிடாது. ஏனெனில், அப்படிச் செய்தால் சில ஆண்டுகள் கழித்து இதே பிரச்சனையை மீண்டும் சந்திக்க நேரிடலாம்’. உலகத்துக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் அனைத்து ஆயுதங்கள், முதன்மையாக அணு ஆயுதங்களை ஒழிக்க அமெரிக்கா முயற்சிக்கும். ஈரானின் அணுசக்தி திட்டத்தை இலக்கு வைப்பது ஒரு ‘முக்கியமான நகர்வு’ எனக் குறிப்பிட்ட அவர் அது மேற்கொள்ளப்படவில்லை என்றால் ‘ஈரான் இஸ்ரேல் மற்றும் மத்திய கிழக்கின் இதர பகுதிகளையும் அழிக்கும்.’ எனத் தெரிவித்தார்.
அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே போர் நிறுத்தம் நீடிக்கும் நிலையில் பேச்சுகளில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
