திருக்கோணேஸ்வர ஆலயத்துக்கு சொந்தமான காணிகளை ஆலயத்திடமே வழங்கக் கோரி தொல்பொருள் திணைக்களம், சட்டமா அதிபர், திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச செயலாளர் ஆகியோருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது.
திருக்கோணேஸ்வர ஆலயம் அமைந்துள்ள நிலம் மற்றும் அருள் மலையை உள்ளடக்கிய 18 ஏக்கர் ஒரு றூட் 29 பேர்ச் காணி, பாபநாச தீர்த்தம் அமைந்துள்ள 3 ஏக்கர் இரண்டு றூட் ஒரு பேர்ச் காணி, மற்றும் கோட்டைவாசல் பிள்ளையார் அமைந்துள்ள 26 பேர்ச் காணி என்பவை ஆலயத்துக்கு சொந்தமானவை.
இதனை, வெளிப்படுத்தவும் அவற்றுக்கான பாரதீனப்படுத்தல் கட்டளையை திருக்கோணேஸ்வஸ்ர ஆலய நம்பிக்கை பொறுப்பாளர் சபைக்கு வழங்க கோரியும் சட்டத்தரணி திலகரெட்ணம் துஷ்யந்தனால் கடந்த ஏப்ரல் 29ஆம் திகதி திருகோணமலை மாவட்ட நீதிமன்றில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
1950ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை காலத்துக்குக் காலம் பல்வேறுபட்ட அரச கெடுபிடிகள் மற்றும் தொல்பொருள் கெடுபிடிகள் அத்துமீறிய கையகப்படுத்தல்கள் என்பவற்றை கட்டுபடுத்தி ஆலயத்தின் இராஜகோபுர கட்டுமானம் மற்றும் இதர அபிவிருத்தி பணிகளை மேற்கொள்ளவே குறித்த வழக்கை தாக்கல் செய்துள்ளதாக ஆலய நம்பிக்கை பொறுப்பாளர் சபையின் தலைவர் சட்டத்தரணி திலகரெட்ணம் துஷ்யந்தன் மேலும் தெரிவித்தார்.
