பிரித்தானியாவின் பிரிஸ்டல் பகுதியில் நடந்த பயங்கர வெடிப்புச் சம்பவத்தில் பெண் ஒருவரும் அவரது முன்னாள் காதலனும் உயிரிழந்துள்ளனர் என பிரித்தானிய தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரிஸ்டல் நகரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த சக்திவாய்ந்த வெடிப்புச் சம்பவத்தில் 35 வயதுடைய ஜோ ஷா மற்றும் அவரது முன்னாள் காதலனான 41 வயதுடைய ரையான் கெல்லி ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.
பொலிஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் ரையான் கெல்லி, தனது கையில் ஒரு வெடிக்கும் கருவியுடன் பலவந்தமாக ஜோ ஷாவின் வீட்டிற்குள் நுழைந்தார் எனவும் இதன்போது ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்திலேயே இருவரும் உயிரிழந்தனர் எனவும் தெரியவந்துள்ளது.
இதேவேளை, ஜோ ஷாவின் மரணத்தை பொலிஸார் ஒரு ‘கொலை’ சம்பவமாகப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில், உயிரிழந்த பெண்ணிற்கும் பொலிஸாருக்கும் இடையே இந்தச் சம்பவத்திற்கு முன்னதாகவே பலமுறை தொடர்புகள் ஏற்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
இதற்கு முன்னர் நடந்த சில குடும்ப வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக ஜோ ஷா பொலிஸாரிடம் முறைப்பாடு செய்திருந்தார்.
இதனால், பொலிஸார் உரிய பாதுகாப்பு வழங்கினார்களா என்பது குறித்து விசாரணை நடத்தப்படவுள்ளது. குடும்ப வன்முறையின் காரணமாக நிகழ்ந்துள்ள இந்தத் துயரச் சம்பவம் பிரிட்டனில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
