17 ஆண்டுகள் கடந்தும் தமிழருக்கு நீதி கிடைக்கவில்லை – சர்வதேச மன்னிப்பு சபை!

இலங்கையின் உள்நாட்டு ஆயுத மோதல் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு இன்றுடன் 17 ஆண்டுகள் நிறைவடைகிறது. இந்த நிலையில், போரால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு உண்மை, நீதி மற்றும் இழப்பீடுகளை வழங்குவதற்கான அவசர தேவையை சர்வதேச மன்னிப்புச் சபை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

போரின்போதும்இ அதன் இறுதிக் கட்டத்திலும் உயிரிழந்த தங்களின் உறவுகளின் நினைவுகளைக் கௌரவிப்பதற்காகவும் தாங்கள் அனுபவித்த சொல்லொணாத் துயரங்களை வெளிப்படுத்துவதற்காகவும் ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரக்கணக்கான தமிழ் உயிர் பிழைத்தவர்களும் அவர்களின் குடும்பத்தினரும் முள்ளிவாய்க்காலில் ஒன்றுகூடுகின்றனர். அந்தவகையில் இன்றைய தினமும் அங்கு நினைவேந்தல்கள் உணர்வுபூர்வமாக இடம்பெற்றன.

ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணைகளின் மூலம் ஆவணப்படுத்தப்பட்ட மோதலின்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் சர்வதேச மனித உரிமைகள் மற்றும் சர்வதேச மனிதாபிமானச் சட்ட மீறல்கள் குறித்த நம்பகமான குற்றச்சாட்டுகளுக்கு உண்மை, நீதி மற்றும் இழப்பீடு வழங்குவதற்கான அவசரத் தேவையை இந்த நினைவேந்தல் மீண்டும் அடிக்கோடிட்டுக் காட்டுவதாக சர்வதேச மன்னிப்புச் சபை சுட்டிக்காட்டியுள்ளது.

உள்நாட்டு வழிமுறைகள் மூலம் முறையான, நடுநிலையான மற்றும் நம்பகமான விசாரணைகளை உறுதி செய்வதாக உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் பலமுறை உறுதியளிக்கப்பட்ட போதிலும் தற்போதைய நிர்வாகம் உள்ளிட்ட அடுத்தடுத்து வந்த அரசாங்கங்கள் இந்த கடப்பாடுகளை நிறைவேற்றத் தவறிவிட்டன என்றும் அந்த சபை குற்றம் சாட்டியுள்ளது.

இவ்வாறாக ஆழமாக வேரூன்றியுள்ள ‘தண்டனையிலிருந்து தப்பும் கலாசாரம்’ நீதி, நல்லிணக்கம் மற்றும் நிலையான அமைதிக்கான வாய்ப்புகளை பலவீனப்படுத்துகிறது. அத்துடன், சர்வதேச சட்டத்தின் கீழ் இலங்கைக்கு உள்ள பொறுப்புகளை நிலைநிறுத்துவதற்கு புதிய மற்றும் உறுதியான நடவடிக்கைகள் அவசரமாக எடுக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் இது உணர்த்துகிறது.

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடல்களின்போது, தங்களது நீண்டகால குறைகளுக்கான தீர்வுகள் மற்றும் கடந்தகால மீறல்களுக்கான பொறுப்புக்கூறல் ஆகியவை உறுதி செய்யப்பட்டால் மட்டுமே அரசாங்கத்துடனான அர்த்தமுள்ள பேச்சுகள் சாத்தியமாகும் என்பதைத் தமிழ் சமூகம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

நீதிக்காக அரும்பாடுபட்டுப் போராடி வரும் தமிழ் சமூகத்தின் இந்த முயற்சிக்கு ‘தெற்காசிய மன்னிப்புச் சபை’ என்றும் துணையாக நிற்கும் என அதன் உத்தியோகபூர்வ அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles