சர்வதேச ரீதியாகவும் உள்நாட்டிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த ‘பயங்கரவாதத்துக்கு நிதியளிப்பதைத் தடுக்கும் உடன்படிக்கை திருத்த சட்டமூலம்’ நாட்டின் அரசமைப்புக்கு முழுமையாக இணங்கக்கூடிய வகையில் அமைந்துள்ளது என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்தத் தீர்ப்பு விவரத்தை சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன இன்று செவ்வாய்க்கிழமை காலை பாராளுமன்ற அமர்வு ஆரம்பமானபோது உத்தியோகபூர்வமாக சபைக்கு அறிவித்தார்.
இதேவேளை, அரசமைப்பின் 121இன் முதலாம் பிரிவின் கீழ், இந்தச் சட்டமூலத்தின் சில பிரிவுகளுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் சவால் விடுத்து மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்த மனுக்கள் மீதான பரிசீலனைகளைத் தொடர்ந்தே உயர் நீதிமன்றம் இந்த முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.
இது குறித்து சபாநாயகர் பாராளுமன்றத்தில் மேலும் விளக்குகையில்-
‘பயங்கரவாதத்துக்கு நிதியளிப்பதைத் தடுக்கும் உடன்படிக்கை திருத்த சட்டமூலமானது ஒட்டுமொத்தமாகவும், அதேபோன்று அதில் உள்ளடக்கப்பட்டுள்ள ஒவ்வொரு தனித்தனி விதிகளும் இலங்கை அரசமைப்பின் எந்தவொரு பிரிவுக்கும் முரணாக அமையவில்லை என உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக முடிவு செய்துள்ளது.
எனவே, இந்தச் சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கு எவ்வித அரசமைப்புத் தடைகளும் இல்லை என்பதை உயர் நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது.’ எனத் தெரிவித்தார்.
இதற்கமைய, இந்த புதிய சட்டமூலமானது பாராளுமன்றத்தில் சாதாரண பெரும்பான்மையுடன் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்படுவதற்கு வழிவகை ஏற்பட்டுள்ளது எனலாம்.
