இந்த ஆண்டு மாகாண சபைகள் தேர்தலை நடத்தும் எண்ணம் அரசாங்கத்துக்கு இல்லை என்று மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்துக்கு நேற்றைய தினம் நிகழ்வு ஒன்றுக்காக வருகை தந்த அவர் ஊடகங்களை சந்தித்தபோதே மேற்கண்டவாறு கூறினார்.
அத்துடன், மாகாண சபைத் தேர்தலுக்காக பாதீட்டில் ஒதுக்கப்பட்ட நிதி, நாட்டில் ஏற்பட்ட பெரும் வெள்ளப் பெருக்கு மற்றும் பொருளாதார, அரசியல் நெருக்கடி நிலைகளைச் சமாளிப்பதற்காக அனர்த்த நிவாரண பணிகளுக்காக செலவிடப்பட்டது. இதற்காக 50 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாலேயே, இந்த வருடத்தில் தேர்தலை நடத்த முடியாமல் போனது என்றும் கூறினார்.
இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சிக் காலத்தில் தேர்தல் சட்டங்களில் ஏற்பட்ட குளறுபடிகள் காரணமாக, தற்போதைய சட்ட சிக்கல்களை ஆராய பாராளுமன்றக் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. அந்தக் குழுவின் அறிக்கை கிடைத்தவுடன் அடுத்த ஆண்டில் தேர்தலை நடத்த முடியும் – என்றார்.
