பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள பலூசிஸ்தான் மாகாணத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை இராணுவத்தினர் பயணித்த ரயிலை குறிவைத்து நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் 24 பேர் உயிரிழந்தனர். இதை அந்நாட்டு உள்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் உறுதி செய்துள்ளார்.
இந்த தாக்குதல் சம்பவம் குவெட்டா நகரில் உள்ள சமன் பதக் ரயில் நிலையம் அருகில் நடந்துள்ளது. இந்த குண்டுவெடிப்பால் ரயில் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதமடைந்தன என பொலிஸ் அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். மேலும், இதன் தாக்கத்தால் அருகில் இருந்த வீடுகளின் ஜன்னல் மற்றும் கண்ணாடிகள் சேதமானதாக தகவல் கிடைத்துள்ளது. இதை பாகிஸ்தானின் முன்னணி செய்தி நிறுவனம் உறுதி செய்துள்ளது.
இந்த தாக்குதலுக்கு பலூச் விடுதலைப் படை எனும் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இராணுவத்தினரை குறிவைத்து நடத்தப்பட்ட தற்கொலை படை தாக்குதல் என அந்த தீவிரவாத அமைப்பு இதை கூறியுள்ளது.
இந்த தாக்குதலில் ரயில் நிலையத்துக்கு அருகில் இருந்த வீடுகளும் சேதம் அடைந்துள்ளதாக சம்பவ இடத்தில் பணியில் உள்ள காவல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மீட்பு பணிகள் நடந்து வருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
தாக்குதல் நடந்த இடத்தில் மக்கள் கூடுவதை தடுக்கும் வகையில் பல்வேறு துறையினர் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. விசாரணை முடிந்த பிறகு உறுதி செய்யப்பட்ட தகவல்கள் பகிரப்படும் என பாகிஸ்தானின் உள்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் பாபர் யூசுப்சாய் தெரிவித்துள்ளார். இந்தத் தாக்குதலில் 24 பேர் உயிரிழந்தனர். பலர் காயங்களுக்குள்ளாகினர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
