குடும்பத் தகராறு காரணமாக ஒருவரை தாக்கிப் படுகொலை செய்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, மகன்கள் உட்பட ஐந்து பேருக்கு காலி – பலப்பிட்டி மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
19 வருட கால நீண்ட விசாரணைக்கு பின்னர் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 2007 ஜூலை 29ஆம் திகதியன்று அல்லது அதற்கு அண்மித்த ஒருநாளில் ஏற்பட்ட குடும்பத் தகராறால் படபொல பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் தடிகள் மற்றும் பலகைகளால் தாக்கிக் கொலை செய்யப்பட்டார்.
இந்தக் கொலை வழக்கு தொடர்பான நீண்ட விசாரணை பலப்பிட்டி மேல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இறுதித் தீர்ப்பு அறிவிக்கப்பட்டது.
வழக்கின் தீர்ப்பை அறிவித்த பலப்பிட்டி மேல் நீதிமன்ற நீதிபதி சந்தேகநபர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை அரசுத் தரப்பு எவ்வித நியாயமான சந்தேகங்களுக்கும் இடமின்றி நீதிமன்றத்தில் நிரூபித்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
இதற்கமைய, குற்றவாளிகளாகக் காணப்பட்ட ஐந்து பேருக்கும் மரண தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
