இரு நாட்களுக்கு முன்னர் கடற்றொழிலுக்கு சென்று காணாமல் போன நான்கு மீனவர்களை தேடும் பணியில் இன்றைய தினம் விமானப் படையினரும் ஈடுபட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் – வடமராட்சியின் பருத்தித்துறை முனை, கற்கோவளம் ஆகிய பகுதிகளிலிருந்து இரு படகுகளில் சென்ற நான்கு மீனவர்களே இவ்வாறு காணாமல் போயிருந்தனர். இவர்கள் நேற்று முன்தினம் 27ஆம் திகதி கடலுக்கு சென்றிருந்தனர்.
நேற்று முதல் கடற்பரப்புகளில் கடும் காற்று வீசி வருகிறது. இதையடுத்து, காணாமல் போன மீனவர்கள் தொடர்பில் அச்சம் எழுந்துள்ளது. இது அவர்களின் குடும்பத்தினர் மத்தியிலும் கவலையை அதிகரித்துள்ளது.
இந்த விடயம் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து, அவர்களை தேடும் பணியை விரைவாக்குமாறு அவர் அனர்த்த முகாமைத்துவ அமைச்சுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதன்படி, விமானப் படையினர், கடற்படையினர் இணைந்து தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
