அரசியல்வாதிகளுக்கு ஒரு நீதி தமிழ் இளைஞருக்கு வேறு நீதியா – கேட்கிறார் நாமல்

அரசாங்கத்தால் பயங்கரவாதத் தடைச் சட்டம் பாரபட்சமான முறையில், அரசியல் தேவைகளுக்கு ஏற்ப பயன்படுத்தப்படுகிறது என்று சிறீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், கிளிநொச்சியைச் சேர்ந்த இளம் கலைஞர் ஒருவர் ராப் பாடல் ஒன்றில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புடைய உள்ளடக்கங்களைப் பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார்.

இசை மற்றும் கலைசார் வெளிப்பாடுகள் பயங்கரவாதம் சார்ந்த குற்றங்களாகக் கருதப்படுமாயின், அண்மையில் நிறைவடைந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பிரசாரங்களின்போது தேசிய மக்கள் சக்தியின் அரசியல்வாதிகள் புலிகள் அமைப்பின் பாடல்களைப் பயன்படுத்தியபோது இதே சட்டங்கள் ஏன் நடைமுறைப்படுத்தப்படவில்லை என அரசாங்கம் விளக்கமளிக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் யாழ்ப்பாண மாவட்ட தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர், அரசியல் இலாபங்களுக்காக இவ்வாறான பாடல்களைச் சமூக ஊடகங்களில் பகிரங்கமாகப் பகிர்ந்திருந்தார். அப்படியாயின், அப்போது பொலிஸ் எங்கே இருந்தது? பயங்கரவாதத் தடைச் சட்டம் எங்கே போனது? எனவும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

சட்டத்தின்படி விடுதலைப் புலிகள் அமைப்பு தடை செய்யப்பட்ட ஓர் இயக்கமாகும். அந்த அமைப்பின் கொள்கைகளை எவரும் பரப்புவதையோ அல்லது மகிமைப்படுத்துவதையோ நாம் ஆதரிக்கவில்லை என்பதில் எமது நிலைப்பாடு தெளிவானது.

எனினும், ஓர் அரசாங்க பாராளுமன்ற உறுப்பினரும் ஒரு சாதாரண இளம் கலைஞரும் ஒரே மாதிரியான செயலைச் செய்ததாகக் குற்றம் சுமத்தப்படும் போது, ஒருவருக்கு அரசியல் பாதுகாப்பும் மற்றவருக்குப் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதும் வழங்கப்படுவது முற்றிலும் தவறானதாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சட்டமானது அரசியல் வசதிகளுக்கு ஏற்ப வளைக்கப்படக் கூடாது. அரசியல்வாதிகளுக்கு ஒரு நீதியும் சாதாரண இளைஞர்களுக்கு வேறொரு நீதியும் வழங்குவதை ஒரு ஜனநாயக சமூகத்தில் ஏற்றுக்கொள்ள முடியாது.

இவ்வாறான செயல்கள் சட்டவிரோதமானவை என அரசாங்கம் கருதினால், அரசியல் பின்னணிகளைப் பாராது பொறுப்புக்கூறல் என்பது சட்டத்தின் முன்னால் அனைவருக்கும் சமமாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். இல்லையெனில், இந்தக் கைது நடவடிக்கையானது அதிகாரத்தைத் திட்டமிட்டுத் தவறாகப் பயன்படுத்திய ஒரு செயலாகவே பார்க்கப்படும் என நாமல் ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles