“யதார்த்த உலகில் வாழுங்கள்” – மொஜ்தபா கமேனியை சந்திக்க விரும்பும் ட்ரம்ப்புக்கு ஈரான் பதில்

ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனியை சந்திக்க தயாராக இருக்கிறார் என டொனால்ட் ட்ரம்ப் கூறியதற்கு, அவர் யதார்த்த உலகில் வாழ வேண்டும் என்று ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அப்பாஸ் அராக்சி, “உச்ச தலைவர் மொஜ்தபா கமேனியை சந்திக்க தயாராக இருப்பதாகவோ அல்லது சந்திப்பை விரும்புவதாகவோடொனால்ட் ட்ரம்ப் கூறியதாக நான் ஒரு செய்தியைப் பார்த்தேன். அவர் யதார்த்தத்துடன் இருக்க வேண்டும். நாம் யதார்த்த உலகில் சிந்திக்கவும் வாழவும் வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். இதன்மூலம், மொஜ்தபா கமேனி – டொனால்டு ட்ரம்ப் சந்திப்பை நிராகரிக்கும் முடிவை ஈரான் எடுத்துள்ளது.

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதா என்ற கேள்விக்கு பதில் அளித்த அப்பாஸ் அராக்சி, “மத்தியஸ்தர்கள் மூலம் இரு தரப்பினரும் தொடர்ந்து தகவல்களை பரிமாறிக்கொண்டாலும் பேச்சுவார்த்தைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் இல்லை” என்று தெரிவித்தார்.

முன்னதாக, வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் , “ஈரான் உச்சத் தலைவர் மொஜ்தபா கமேனியைச் சந்திக்க வேண்டும் என்று நான் விரும்பவில்லை. ஆனால், அப்படிச் சந்தித்தால் அதனை பெருமையாகக் கருதுவேன். நாங்கள் ஓர் ஒப்பந்தத்தை எட்ட முடியுமா என்பதை பார்க்க விரும்புகிறேன். ஒருவேளை ஒப்பந்தம் ஏற்பட்டால் அவரைச் சந்திக்க வாய்ப்பு உள்ளது. அப்போதை அவரைச் சந்திக்க எனக்கு சம்மதமே.

இந்தச் சந்திப்பை நான் பரிந்துரைக்கவில்லை. ஆனால், சிலர் பரிந்துரைத்துள்ளார்கள். அப்படி ஒரு சந்திப்பு நடக்க முடியும் என்றால் நடக்கும். அப்போது நான் மரியாதையுடன் நடந்து கொள்வேன். நான் அவருக்குப் பிடித்தமான நபர் அல்ல என்பதை சொல்வேன். அதேநேரத்தில், அவர் ஒரு தொழில்முறை அணுகுமுறை கொண்டவராகவ இருப்பார். சில வட்டாரங்களில் அவருக்கு மிகச் சிறந்த நற்பெயர் உள்ளது” என தெரிவித்தார்.

ஈரான் உடனான மோதல் காரணமாக கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவது குறித்த கேள்விக்கு பதில் அளித்த டொனால்டு ட்ரம்ப், “நிலைமை இதைவிட மோசமாக இருக்கும் என்று மக்கள் நினைத்தார்கள். இன்று ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 96 டாலராக உள்ளது. ஆனால், அது 300 டாலராக உயரும் என மக்கள் நினைத்தார்கள்” எனத் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles