கனிம வளங்களை மூலப்பொருட்களாக ஏற்றுமதி செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹெந்துன்னெத்தி தெரிவித்துள்ளார்.
இன்று செவ்வாய்க்கிழமை புதிய ‘தேசிய கனிய வளக் கொள்கை 2026’ஐ நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில், கனிம வளங்கள் தொடர்பான அகழ்வாராய்ச்சி, அகழ்வுப் பணிகள், பதப்படுத்துதல் மற்றும் அவற்றுக்கு மேலதிக பெறுமதி சேர்த்தல் ஆகிய ஒட்டுமொத்த செயற்பாடுகளையும் உள்ளடக்கியதாக இந்த புதிய கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது.
‘இதற்கு முன்னர் கடந்த 1999ஆம் ஆண்டிலேயே இலங்கையில் தேசிய கனியவள கொள்கையொன்று சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. எனினும்> தற்போதைய நவீன காலத்துக்கும் நாட்டின் பொருளாதார தேவைகளுக்கும் பொருத்தமான வகையில், 27 வருடங்களின் பின்னர் அது முழுமையாக அபிவிருத்தி செய்யப்பட்டு, புதிய திருத்தங்களுடன் இந்த 2026ஆம் ஆண்டுக்கான கொள்கையை நாம் சமர்ப்பித்துள்ளோம்.
நாட்டில் கனிம வளங்களை அகழ்வாராய்ச்சி செய்வதற்காக கடந்த காலங்களில் 471 அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டிருந்த போதிலும் அவற்றில் வெறும் 8 இடங்களில் மட்டுமே உண்மையான அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
தற்போது 12 அனுமதிப்பத்திரங்கள் மட்டுமே செல்லுபடியாக உள்ள நிலையில்> அவற்றில் 6 அனுமதிப்பத்திரங்கள் லங்கா மினரல்ஸ்> கஹட்டகஹ சுரங்கம்> போகல மற்றும் எப்பாவல பொஸ்பேட் போன்ற அரச நிறுவனங்களின் வசமே காணப்படுகின்றன. அனுமதிப்பத்திரங்களைப் பெற்றுக்கொண்டு அகழ்வுப் பணிகளை முன்னெடுக்காத நிலைமை இனி அனுமதிக்கப்படாது.
இதுவரையான காலப்பகுதியில் இலங்கையிலிருந்து கனிம வளங்கள் வெறும் மூலப்பொருட்களாகவே வெளிநாடுகளுக்கு குறைந்த விலைக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தன. இதனால் நாட்டுக்குக் கிடைக்க வேண்டிய பெருமளவிலான வருமானம் இல்லாது போனது. எனினும்> இந்த புதிய கொள்கையின் கீழ், இனிவரும் காலங்களில் கனிம வளங்களை வெறும் மூலப்பொருட்களாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முடியாது. அவற்றுக்கு இலங்கையிலேயே ‘மேலதிக பெறுமதி’ சேர்த்த பின்னரே புதிய திட்டத்தின்கீழ் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். – என்றும் கூறினார்.
