உலகப் புகழ்பெற்ற கென்னடி கலை மைய கட்டடத்தில் இருந்து ட்ரம்பின் பெயர் நீக்கம்

வாஷிங்டன் டிசி நகரில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற கென்னடி கலை மைய கட்டடத்தில் பொருத்தப்பட்டிருந்த ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் பெயரை நீக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கென்னடி கலை மைய கட்டிடம் மற்றும் அதன் செயல்பாடுகளில் இருந்து ட்ரம்பின் பெயரை நீக்குவதற்காக நீதிமன்றம் விதித்திருந்த காலக்கெடுவை நீடிக்குமாறு கென்னடி கலை மையத்தின் நிர்வாகம் விடுத்திருந்த கோரிக்கைகள் அனைத்தையும் நேற்று (12) நீதிபதி நிராகரித்த பின்னணியில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, நேற்றைய தினமே பணியாளர்கள் குழுவொன்று வருகை தந்து, கட்டடத்தில் உள்ள ட்ரம்பின் பெயர் பொறிக்கப்பட்ட எழுத்துக்களை அகற்றுவதற்காக அதனைச் சுற்றி சாரங்கள் அமைக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

டொனால்ட் ட்ரம்பின் இரண்டாவது பதவிக்காலத்தின் தொடக்கத்தில், இந்த கலை மையத்தின் பழைய நிர்வாகக் குழு நீக்கப்பட்டு, அதற்குப் பதிலாக அவரது ஆதரவாளர்கள் குழுவொன்று நியமிக்கப்பட்டதோடு அதன் தலைவர் பதவியும் அவர்களுக்கே வழங்கப்பட்டது. அதன் பின்னரே, அவர்கள் இக்கட்டடத்தின் பெயருடன் ட்ரம்பின் பெயரையும் இணைத்திருந்தனர்.

தீர்ப்பை வழங்கிய அமெரிக்க மாவட்ட நீதிபதி கிறிஸ்டோபர் கூப்பர், இந்த தேசிய மையத்தின் பெயரை மாற்றுவதற்கான அதிகாரம் அமெரிக்க காங்கிரஸுக்கு மட்டுமே உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

அத்துடன், பாரிய மறுசீரமைப்பு பணிகளுக்காக எனக் கூறி, அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு இந்த கலை மையத்தை மூடுவதற்கு ட்ரம்ப் நிர்வாகம் எடுத்திருந்த முடிவையும் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நீதிபதி தடை செய்தார்.

இதற்கமைய, கென்னடி கலை மையத்தின் உத்தியோகபூர்வ இணையதளத்தில் இருந்து ஏற்கனவே டொனால்ட் ட்ரம்பின் பெயர் நீக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும், இனிவரும் காலங்களில் நிறுவன ஆவணங்கள், மின்னஞ்சல் கையொப்பங்கள் மற்றும் கடிதத் தலைப்புகளில் டொனால்ட் ட்ரம்பின் பெயரைப் பயன்படுத்தாமல், ‘கென்னடி மையம்’ என்ற பெயரை மட்டுமே பயன்படுத்துமாறும் அதன் முதன்மை சட்டப் பிரிவு ஊழியர்களுக்கு அறிவுறுத்திப்பட்டுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles