மலேசியாவின் காராக் நெடுஞ்சாலையில் வேகக் கட்டுப்பாட்டை இழந்து தலைகீழாகக் கவிழ்ந்த லொறி ஒன்று அருகில் சென்ற கார் மீது கவிழ்ந்து விழுந்ததில், காரில் பயணம் செய்த நான்கு பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
விபத்துக்குள்ளான அந்த லொறி, உலோகத் துகள்களை ஏற்றிக்கொண்டு கோலாலம்பூரிலிருந்து குவாந்தான் நோக்கிச் சென்று கொண்டிருந்ததாகப் பகாங் மாநிலக் பொலிஸ் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
நெடுஞ்சாலையின் வளைவான மற்றும் இறக்கமான பகுதியில் சென்றபோது, சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த லொறி, இடதுபுறப் பாதையில் தலைகீழாகக் கவிழ்ந்தது. அப்போது அதே பாதையில் பயணித்துக் கொண்டிருந்த கார் அந்த லொறியின் கீழ் அகப்பட்டு நசுங்கியது. இதில் காரை ஓட்டிச் சென்ற 55 வயது நபர் மற்றும் அவருடன் பயணித்த மூன்று பயணிகள் என மொத்தம் 4 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர்.
பலியானவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு, உடற்கூறாய்வுப் பரிசோதனைக்காகத் தெமர்லோவில் உள்ள சுல்தான் ஹாஜி அகமட் ஷா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளன.
இவ்விபத்தில் காயமடைந்த லொறி ஓட்டுநரின் தலை மற்றும் இடுப்புப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதால், அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
