நிலநடுக்கத்தின் பின்னர் பிலிப்பைன்ஸில் 2 மீற்றர் உயர்ந்த கடல் மட்டம்

பிலிப்பைன்ஸில் இந்த வாரம் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக, கடல் படுக்கை சுமார் 2 மீற்றர் வரை மேல்நோக்கி உயர்ந்துள்ளதாக அந்நாட்டின் சுற்றுச்சூழல் துறை தெரிவித்துள்ளது.

இதனால் பவளப்பாறைகள் மற்றும் கடல் புற்கள் வெளியே தெரிவதுடன், கடல்வாழ் உயிரினங்களும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன.

கடந்த திங்கட்கிழமை தெற்கு மிண்டனாவோ தீவில் ஏற்பட்ட 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் சிக்கி இதுவரை குறைந்தது 61 பேர் உயிரிழந்தனர். மேலும் 40 பேர் காணாமல் போயிருந்தனர்.

நிலநடுக்கம் நடைபெற்று இரண்டு நாட்களுக்குப் பிறகு, “கடலோர உயர்வு” (coastal uplift) எனப்படும் இந்த புவியியல் நிகழ்வை உள்ளூர் மக்கள் கவனித்துள்ளனர். சில இடங்களில் கடற்கரை பகுதி சுமார் 200 மீற்றர் வரை விரிவடைந்துள்ளது.

கடலுக்கு அடியில் உள்ள ‘கொட்டபாடோ அகழி’ பகுதியில் ஏற்பட்ட நகர்வு காரணமாகவே சாரங்கனி மற்றும் டவாவோ ஆக்ஸிடென்டல் ஆகிய மாகாணங்களின் கடலோரப் பகுதிகள் மேல்நோக்கித் தள்ளப்பட்டு, கடலடிப் பகுதி வெளியே தெரிய ஆரம்பித்துள்ளதாக பிலிப்பைன்ஸ் எரிமலை மற்றும் நிலநடுக்கவியல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

சுற்றுச்சூழல் துறையினரால் வெளியிடப்பட்ட புகைப்படங்களில், வெளியே தெரிந்த பவளப்பாறைகளின் மீது செத்து மடிந்த மீன்கள் மற்றும் பிற கடல் உயிரினங்கள் கிடப்பது தெரியவந்துள்ளது.

இறந்த கடல் உயிரினங்கள் அழுகுவதால் ஏற்படும் துர்நாற்றம் மற்றும் நச்சு வாயுக்கள் காரணமாகத் தங்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படுமோ என்ற அச்சத்தில் உள்ளூர் மக்கள் இது குறித்து அதிகாரிகளுக்குத் தகவல் வழங்கியுள்ளனர்.

பாதிக்கப்பட்ட கடற்பரப்பு எவ்வளவு பெரியது என்பதை முழுமையாகக் கண்டறிய இன்னும் சில நாட்கள் ஆகும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எனினும், வெளியே தெரிந்துள்ள பவளப்பாறைகள் மற்றும் கடல் புற்கள் ஏற்கனவே மடியத் தொடங்கியுள்ளதால், அவற்றுடன் வாழும் அரிய வகை மீன்கள், கடல் விலாங்கு மீன்கள் மற்றும் சிப்பிகள் போன்ற பல உயிரினங்கள் அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles