ஏறாவூர் பகுதியில் 16 வயது சிறுவன் ஒருவர் கடத்திச் செல்லப்பட்டு தாக்கப்பட்ட தொடர்பாக சமூக ஊடகங்களில் வெளியான காணொளி ஆதாரத்தின் அடிப்படையில், 16 வயதுடைய மற்றொரு சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளாா் என ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
பாதிக்கப்பட்ட சிறுவனின் தாயார் அளித்த முறைப்பாட்டைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், குறித்த கைது நேற்று திங்கட்கிழமை மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் சிலர் தலைமறைவாகியுள்ளதுடன், அவர்களைத் தேடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளின்படி, ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சவுக்கடி – தளவாய் பகுதியில் இளைஞர் குழுக்களுக்கிடையில் நீண்டகாலமாக முரண்பாடுகள் நிலவி வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன் தொடர்ச்சியாக, கடந்த மாதம் வீதியால் தனியாகச் சென்றுகொண்டிருந்த 16 வயது சிறுவன் ஒருவர் குழுவொன்றினரால் கடத்திச் செல்லப்பட்டு, ஆட்கள் நடமாட்டம் குறைந்த பகுதியில் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்தத் தாக்குதலில் காயமடைந்த சிறுவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற பின்னர் வீடு திரும்பியுள்ளார்.
சம்பவத்தின் போது எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் காணொளி அண்மையில் சமூக ஊடகங்களில் பரவியதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட சிறுவனின் தாயார் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
அதன்பேரில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், காணொளியில் அடையாளம் காணப்பட்ட 16 வயது சிறுவன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் மூவர் தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சிறுவனை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.
