கனடா தினமன்று ஹமில்டன் பகுதியில் உள்ள இயற்கை பாதுகாப்பு வலயத்திற்குச் சென்றபோது காணாமல் போன ஏழு வயது சிறுவன், உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளான்.
நெத்தானியேல் செலம்பி என அடையாளம் காணப்பட்ட இந்தச் சிறுவன், கடந்த புதன்கிழமை (ஜூலை 1) பிற்பகல் 3 மணியளவில் ‘பின்புரூக் பாதுகாப்பு வலயத்தில்’ இருந்தபோது திடீரென காணாமல் போயிருந்தான். சிறுவனைக் கண்டுபிடிப்பதற்காக பொலிஸார், அவசரகால மீட்புப் படையினர் மற்றும் தன்னார்வலர்கள் இணைந்து பெருமளவிலான தேடுதல் வேட்டையைத் தொடங்கினர்.
இந்நிலையில், பீல் பிராந்திய பொலிஸாரின் நீருக்கடியிலான தேடுதல் மற்றும் மீட்புக் குழுவின் முக்குளிப்பாளர்கள், நேற்று வியாழக்கிழமை பிற்பகல் 1:30 மணியளவில் சிறுவனின் உடலை ஏரிப் பகுதியில் இருந்து மீட்டனர்.
இந்த மரணம் குறித்து ஹமில்டன் பொலிஸ் பிரிவு மற்றும் மரண பரிசோதகர் அலுவலகம் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன.
எனினும், இந்த மரணத்தில் எவ்வித சந்தேகத்திற்கிடமான பின்னணியோ அல்லது குற்றச் செயல்களோ இருப்பதாகத் தெரியவில்லை என பொலிஸார் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளனர்.
