ஆபாச கருத்தால் சர்ச்சையில் சிக்கிய ஆஸ்திரேலிய பிரதமர்

பொப் பாடகி கைலி மினோக் குறித்து, தான் வெளியிட்ட கருத்துக்களுக்காக ஆஸ்திரேலியப் பிரதமர் அந்தோனி அல்பானிஸ் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியுள்ளார்.

நகைச்சுவை நடிகை நிக்கி ஆஸ்போர்ன் நடத்திய ‘புஷ் டீப்’ (Bush Deep) பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் பிரதமர் கலந்துகொண்டார்.

20 நிமிடங்கள் நடைபெற்ற இந்த நேர்காணலின் போது, பாடகி கைலி மினோக், நடிகை நிக்கோல் கிட்மேன் அல்லது கலைஞர் ரோண்டா பர்ச்மோர் ஆகிய மூவரில் யாரை “உறவு கொள்ள, திருமணம் செய்ய அல்லது டேட்டிங் செய்ய” விரும்புவீர்கள் என்ற சர்ச்சை கேள்வி பிரதமரிடம் கேட்கப்பட்டது.

ஆரம்பத்தில் இந்தக் கேள்விக்கு பதிலளிப்பதைத் தவிர்க்க முயன்ற அல்பானிஸ், பின்னர் “ஓ, கைலி தான், என்பதில் சந்தேகமில்லை” என்று கூறினார்.

இதனைத் தொடர்ந்து அவருக்கு எதிராகக் கண்டனக் குரல்கள் வலுத்தன.

நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் பிரதமரின் இந்த கருத்துக்கள் “முற்றிலும் பொருத்தமற்றவை” என்று கூறினார்,

மேலும் மற்றொருவர் இக்கருத்துக்கள் “பெண்களை அவமதிப்பதாகவும்… பிரதமரின் பதவியைக் கண்ணியக் குறைவாகக் காட்டுவதாகவும்” சாடினார்.

வீடியோக்களைப் பதிவிடுவதன் மூலம் பிரபலமான ஆஸ்போர்ன், இந்த ஆண்டின் தொடக்கத்தில் தனது பாட்காஸ்ட் தொடரைத் தொடங்கினார்.

அவரது பாட்காஸ்ட் தளம் அவரைப் பற்றி குறிப்பிடுகையில், “யாரும் கேட்கத் துணியாத கேள்விகளைக் கேட்கும் ஒரு பொருத்தமற்ற பத்திரிகையாளர்” என்று விவரிக்கிறது.

திங்கட்கிழமை அதிகாலை வெளியிடப்பட்ட ஒரு சுருக்கமான அறிக்கையில், பிரதமர்: “நான் வெளியிட்ட கருத்துகளுக்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

கான்பெராவில் உள்ள பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த நேர்காணல் எடுக்கப்பட்டு, கடந்த வார இறுதியில் வெளியிடப்பட்டது.

ஆஸ்போர்ன் முதன்முதலில் இந்த கேள்வியை எழுப்பியபோது, கடந்த நவம்பரில் தனது துணைவியார் ஹேடனைத் திருமணம் செய்துகொண்ட அல்பானிஸ், “எனக்கு இப்போதுதான் திருமணமாகியுள்ளது, ஆறு மாதங்கள் தான் ஆகிறது” என்று ஆரம்பத்தில் பதிலளித்தார்.

ஆனால் ஆஸ்போர்ன் தொடர்ந்து வற்புறுத்தியதை அடுத்து, “ஓ, கைலி தான், என்பதில் சந்தேகமில்லை” என்று கூறினார்.

அதற்கு ஆஸ்போர்ன், “நீங்கள் கைலியைத் திருமணம் செய்து, அவரோடு உறவு கொண்டு, டேட்டிங் செய்வீர்களா?” என்று கேட்டார்.

அதற்கு அல்பானிஸ், “மேலே சொன்ன அனைத்தும் தான். அவர் ஒரு அற்புதமானவர்,” என்று பதிலளித்தார்.

அல்பானிஸ் பசிபிக் பிராந்தியத்திற்குப் பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், தற்காலிகப் பிரதமராகச் செயல்படும் ரிச்சர்ட் மார்ல்ஸ் ABC ஊடகத்திடம் கூறுகையில், சமூகத்தில் பெண்களின் முன்னேற்றத்திற்கு அரசாங்கம் “முழுமையாக அர்ப்பணிப்புடன்” செயல்படுகிறது என்றார்.

“அவ்வப்போது, நாம் வழக்கமாகச் செய்யும் நேர்காணல்களைத் தாண்டி மாறுபட்ட நேர்காணல்களையும் செய்கிறோம்.

ஆனால், இங்கு கவனிக்க வேண்டிய மற்றொரு விஷயம் என்னவென்றால், பிரதமரின் தலைமையிலான இந்த அரசாங்கமே ஆஸ்திரேலிய வரலாற்றில் முதன்முறையாக அமைச்சரவையில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் சம எண்ணிக்கையிலான பிரதிநிதித்துவத்தை வழங்கிய அரசு ஆகும்,” என்று மார்ல்ஸ் கூறினார்.

மேலும், வெளிநாட்டுப் பயணங்களின் போது தனக்குக் கிடைத்த மிக மோசமான பரிசு எது என்றும் அல்பானிஸிடம் கேட்கப்பட்டது.

அதற்கு அவர், ஜப்பானியப் பிரதமர் சனாயே தகைச்சி இரண்டு பூசணிப் பழங்களை (Melons) கொண்டு வந்ததாகக் கூறி, அது “விசித்திரமானதாக” இருந்தாலும் இறுதியில் “மிகச் சிறந்த” பரிசாக அமைந்தது என்று கூறினார்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles