ஜப்பானின் ஐச்சி-நகோயாவில் (Aichi-Nagoya) நடைபெற்று வரும் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், ஆடவர் ஈட்டி எறிதல் பிரிவில் இலங்கையின் ருமேஷ் தரங்க பத்திரகே தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் (Glasgow Commonwealth Games) அவர் வென்ற தங்கப் பதக்கத்தைத் தொடர்ந்து, 2026 ஆம் ஆண்டில் அவர் வசப்படுத்தும் மற்றுமொரு முக்கிய சர்வதேசப் பதக்கமாக இந்த வெற்றி அமைந்துள்ளது.
ஆடவர் ஈட்டி எறிதலில் தற்போது உலகத் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள ருமேஷ் தரங்க, கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற ரோம் டயமண்ட் லீக் (Rome Diamond League) தொடரில் 92.62 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்து தனது தனிப்பட்ட சிறந்த சாதனையாகவும், இலங்கைக்கான புதிய தேசிய சாதனையாகவும் பதிவு செய்திருந்தார்.
இந்த ஆண்டு தொடர்ச்சியாகப் பல சாதனைகளைப் படைத்து சிறப்பான பார்மில் (Form) இருக்கும் அவர், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இலங்கைக்குப் பதக்கம் வென்று தருவார் எனப் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட முன்னணி வீரர்களில் ஒருவராகக் களமிறங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
