ஆஸ்திரேலியா விக்டோரியா மாநிலத்தில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
தென்கிழக்கு மெல்போர்னிலுள்ள லியோன்கத்தா (Leongatha) பகுதிக்கு அருகில், அதிகாலை 2:01 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் அதிகாலை வேளையில் மக்கள் பீதிக்குள்ளாகினர்.
இது ரிக்டர் அளவில் 4.8 ஆகப் பதிவாகியுள்ளதாக Geoscience Australia தெரிவித்துள்ளது. விக்டோரியா மாநிலத்தில் மூன்று ஆண்டுகளில் பதிவான மிகச் சக்திவாய்ந்த நிலநடுக்கம் இதுவாகும்.
இதனைத் தொடர்ந்து, குறுகிய நேரத்திற்குள் 3.1 ரிக்டர் அளவில் நில அதிர்வும் (aftershock), அதனைத் தொடர்ந்து சிறிய அளவிலான பல நில அதிர்வுகளும் பதிவாகின.
நிலநடுக்கத்தை உணர்ந்ததாக இதுவரை சுமார் 18,000 மக்கள் வரை தெரிவித்துள்ளனர் என நிலநடுக்கவியல் நிபுணர் டாக்டர் ஹாடி காசெமி (Dr Hadi Ghasemi) கூறினார்.
இந்தச் சம்பவம் குறித்து சமூக வலைத்தளங்களில் மக்கள் உடனடியாகப் பதிவிடத் தொடங்கினர்.
“விமானம் எதுவும் கீழே விழவில்லையே என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளவே உடனடியாக முகநூலைத் (Facebook) திறந்தேன்” என்று ஒருவர் பதிவிட்டுள்ளார்.
கிரான்போர்ன் (Cranbourne) பகுதிக்கு அருகில் வசிக்கும் மற்றொருவர், தனது படுக்கை திடீரென மிதப்பது போல் ஆடியதாகக் குறிப்பிட்ட நிலையில், சரக்கு இரயில் ஒன்று கடந்து செல்வது போன்ற உரத்த சத்தம் கேட்டதாக வேறொருவர் பதிவிட்டுள்ளார்.
இருப்பினும், இதுவரை சேதங்கள் எதுவுமில்லை என்று அறிக்கைகள் தெரிவிக்கின்றன. ஒக்ரோபர் 2023இல் மெல்போர்னுக்கு தென்மேற்கே உள்ள ‘கிரேட் ஓஷன் ரோட்’ (Great Ocean Road) பகுதியில் 5.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதற்குப் பிறகு, விக்டோரியாவில் பதிவான மிகப்பெரிய நிலநடுக்கம் இதுவேயாகும்.
முன்னதாக, செப்டம்பர் 2021இல் ஏற்பட்ட 5.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் மெல்போர்னில் உள்ள கட்டடங்களைச் சேதப்படுத்தியது. அன்றிலிருந்து அப்பகுதியில் நில அதிர்வுகள் அதிகரித்து வருகின்றன.
நிலநடுக்கம் ஏற்படும் தருணத்தில், மக்கள் உடனடியாகக் தரையில் அமர்ந்து (Drop), உறுதியான மேஜை அல்லது தளபாடங்களின் கீழ் தஞ்சம் புகுந்து (Cover), அதிர்வுகள் குறையும் வரை அதைப் பலமாகப் பிடித்துக்கொள்ள வேண்டும் (Hold on) என்று டாக்டர் காசெமி அறிவுறுத்தியுள்ளார்.
