லாகூரிலிருந்து சுமார் 500 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ராஜன்பூர் அருகே பஸ் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் 11 பேர் உயிரிழந்துள்ளதுடன் 30 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
அத்துடன் 3 பேரின் நிலைமை கவலைக்குரிய வகையில் உள்ளதுடன் அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் கராச்சி நகரில் இருந்து, பஞ்சாப் மாகாணத்தில் உள்ள தேரா காசி கான் மாவட்டத்திற்கு சென்ற பஸ்ஸே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்து நடந்த பகுதியில், நெடுஞ்சாலையில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்ததாகவும் பஸ் வேகமாக சென்றதே விபத்திற்கு காரணம் என்று நம்பப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் பெண்களும், குழந்தைகளும் அடங்குவர். அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பஞ்சாப் மாகாண முதல் அமைச்சர் மரியம் நவாஸ், இரங்கல் தெரிவித்துள்ளார்.
மேலும், காயமடைந்தவர்களுக்கு சிறந்த சிகிச்சையை உறுதி செய்யும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
