பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா நாட்டைவிட்டு வெளியேறிய காட்சியைப் படம்பிடித்தார் எனக் கூறப்படும் முன்னாள் விமானப்படை அதிகாரி கே.எம். தஹ்சீப் சௌரி, டாக்காவில் உள்ள துராக் ஆற்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கடந்த 2024ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் பணியிலிருந்து விடுவிக்கப்பட்ட இவர், உளவுத்துறையின் கண்காணிப்பில் இருந்ததார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாணவர் போராட்டங்களைத் தொடர்ந்து ஆட்சியை இழந்த ஷேக் ஹசீனா, இராணுவ ஹெலிக்கொப்டர் மூலம் நாட்டைவிட்டு வெளியேறிய காட்சியை இவர் காணொளியாகப் பதிவு செய்ததாகக் கூறப்படுகிறது.
இந்தப் பின்னணியில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாகவே அவரது மரணம் நிகழ்ந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த பங்களாதேஷ் உள்துறை அமைச்சர் சலாஹுதீன் அகமது, முதல்கட்ட விசாரணைகள் நிறைவடைந்த பின்னரே சம்பவம் தொடர்பான முழுமையான விபரங்களைத் தெரிவிக்க முடியும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
