மாவீரர் நாள் நினைவேந்தல் ஏற்பாடுகள் மற்றும் தியாக தீபம் திலீபனின் சிலை தொடர்பான விவகாரங்கள், யாழ்ப்பாணம் மாநகர சபையின் இன்றைய மாதாந்த அமர்வில் பெரும் சர்ச்சையையும் அமளிதுமளியையும் ஏற்படுத்தியுள்ளன.
யாழ்ப்பாணம் மாநகர சபையின் மாதாந்த அமர்வு இன்று வியாழக்கிழமை மாநகர மேயர் வி.மதிவதனி தலைமையில் நடைபெற்றது.
இதன்போது, எதிர்வரும் மாவீரர் நாள் நினைவேந்தலை முன்னிட்டு நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் மேற்குப் புறத்திலுள்ள காணியைத் தனியார் ஒருவருக்குக் குத்தகைக்கு வழங்குவது தொடர்பான விடயம் சபையின் கவனத்துக்கு மேலெழுப்புவதற்காகக் கொண்டுவரப்பட்டது.
ஈ.பி.டி.பி. வெளிநடப்பும் காணி குத்தகை விவாதமும்
அந்தக் காணியை மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகளுடன் தொடர்புபடுத்தி வழங்குவது தொடர்பாக விவாதம் முன்னெடுக்கப்பட்டபோது, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈ.பி.டி.பி.) உறுப்பினர்கள் சபை அமர்விலிருந்து வெளிநடப்புச் செய்தனர்.
இதனைத் தொடர்ந்து தேசிய மக்கள் சக்தி, இலங்கைத் தமிழரசுக் கட்சி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உள்ளிட்ட மாநகர சபையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஏனைய கட்சிகளின் உறுப்பினர்கள் விவாதத்தைத் தொடர்ந்து முன்னெடுத்தனர்.
அந்தக் காணியைக் குத்தகைக்கு வழங்கும்போது கடந்த கால அனுபவங்களைக் கருத்திற்கொண்டு, எதிர்காலத்தில் எவ்விதமான சர்ச்சைகளும் ஏற்படாத வகையில் இறுக்கமான நிபந்தனைகளை உள்ளடக்கி வழங்குவது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்பட்டது.
என்.பி.பியின் நிலைப்பாடு
இதன்போது கருத்துத் தெரிவித்த தேசிய மக்கள் சக்தியின் (என்.பி.பி.) மாநகர சபை உறுப்பினர் சு.கபிலன், “இந்தக் காணியை வழங்குவது தொடர்பில் முதலில் முறையான சட்ட ஆலோசனையைப் பெற்றுக்கொண்டு, அதன் அடிப்படையில் மேல்நடவடிக்கை எடுப்பதே பொருத்தமானது” என்று குறிப்பிட்டார்.
மேலும், எந்தவொரு தரப்பினரின் நினைவேந்தலாக இருந்தாலும் அதனை நினைவுகூரும் ஜனநாயக உரிமையைத் தமது கட்சி ஆதரிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
தமிழரசு – முன்னணி இடையே காரசார மோதல்
இதற்கிடையே, மாவீரர் நாள் நினைவேந்தல் ஏற்பாடுகள் மற்றும் அந்தக் காணியை வழங்குவது தொடர்பான விவாதம், இலங்கைத் தமிழரசுக் கட்சி மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்களுக்கிடையில் கடுமையான கருத்து மோதலாக மாறியது.
இரு தரப்பினரும் தத்தமது அரசியல் நிலைப்பாடுகளை முன்வைத்து வாதிட்ட நிலையில், இந்த விவாதம் காரசாரமான வாக்குவாதமாக உருவெடுத்துச் சபையின் வழக்கமான நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டதோடு, கூச்சல் குழப்பங்களால் அமர்வில் பெரும் அமளிதுமளி ஏற்பட்டது.
இதேவேளை, தியாக தீபம் திலீபனின் சிலை விவகாரமும் இணைந்து சபையில் அரசியல் ரீதியான முரண்பாடுகளை மேலும் தீவிரப்படுத்தியிருந்த நிலையில், இன்றைய யாழ் மாநகர சபை அமர்வு பெரும் அமளியில் முடங்கியது.
