கிளிநொச்சியில் காணாமற்போன பொலிஸ் உத்தியோகத்தரின் சடலம் மீட்பு
Colombo (News 1st) கிளிநொச்சி – மலையாளபுரத்தில் நேற்று (14) காணாமற்போனதாகக் கூறப்படும் பொலிஸ் உத்தியோகத்தரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
மலையாளபுரம் – புது ஐயங்கன் குளம் பகுதியில் சட்டவிரோத மதுபான உற்பத்தி இடம்பெறுவதாக கிளிநொச்சி பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து, நேற்று கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தை சேர்ந்த 3 பொலிஸார் குறித்த இடத்தை சுற்றிவளைப்பதற்காக சென்றிருந்தனர்.
பின்னர் பொலிஸாரில் இருவர் திரும்பிய நிலையில், ஒருவர் குறித்த காட்டுப் பகுதியில் காணாமல் போயிருந்தார்.
பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து மோப்ப நாய்களின் உதவியுடன் காணமால் போன பொலிஸ் உத்தியோகத்தரை தேடும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இந்த நிலையில், புது ஐயங்கன் குளத்தில் இருந்து பொலிஸ் உத்தியோகத்தரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.