Colombo (News 1st) சர்ச்சைக்குரிய Human Immunoglobulin மருந்து கொடுக்கல் வாங்கல் தொடர்பில் கைதாகியுள்ள சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக்க ஶ்ரீ சந்திரகுப்த உள்ளிட்ட 7 பேரும் எதிர்வரும் முதலாம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான வழக்கு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே விளக்கமறியல் உத்தரவு நீடிக்கப்பட்டது.
அமைச்சர் ஒருவர் அல்லது அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் ஒருவரை பாதுகாப்பதற்காக சட்டமா அதிபர் திணைக்களம் தற்போது தமது விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக ஜனாதிபதி சட்டத்தரணி மைத்ரி குணரத்ன இன்று நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
சர்ச்சைக்குரிய மருந்து கொடுக்கல் வாங்கல் சம்பவம் தொடர்பில் முதலாவது முறைப்பாட்டாளரான சமல் சஞ்ஜீவ சார்பில் இன்று தாம் மன்றில் முன்னிலையாகியுள்ளதாகவும் அவர் கூறினார்.
ஜனாதிபதி சட்டத்தரணி மைத்ரி குணரத்ன நீதிமன்றத்தில் முன்னிலையானமை தொடர்பில் அரச தரப்பு பிரதி சொலிஸிட்டர் நாயகம் லக்மினி கிரிஹாகம தனது எதிர்ப்பை வௌியிட்டார்.
இந்த சம்பவம் தொடர்பில் டொக்டர் சமல் சஞ்ஜீவவிடம் இருந்து எந்தவொரு முறைப்பாடும் முன்வைக்கப்படவில்லை என அவர் தெரிவித்தார்.
சட்டத்தரணிகள் சங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தி ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் ஜயசூரிய, பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பில் முன்னிலையாகியிருந்தார்.
சட்டத்தரணிகள் சங்கத்தின் செயலாளர் ஊடாக இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட தரப்பினரை பிரதிநிதித்துவப்படுத்தி மன்றில் முன்னிலையாகுமாறு தமக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
இதன்போது, அரச தரப்பு பிரதி சொலிஸிட்டர் நாயகம் லக்மினி கிரிஹாகம தனது எதிர்ப்பை வௌியிட்டார்.
பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பில் அல்லது ஏதேனும் ஒரு வகையில் நீதிமன்றத்தில் ஆஜரானால், இது தொடர்பாக முதலில் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டிருக்க வேண்டுமென அவர் சுட்டிக்காட்டினார்.
அதேபோன்று, அது தொடர்பான தௌிவுபடுத்தலையும் நீதிமன்றத்தில் முன்வைத்திருக்க வேண்டுமென அவர் தெரிவித்தார்.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் யாப்பிற்கமைய, சட்டத்தின் ஆட்சி மீறப்படும் சந்தர்ப்பங்களில் சட்டத்தரணிகளாக ஆஜராக வேண்டிய கட்டாயம் உள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் ஜயசூரிய இதன்போது கூறினார்.
அளுத்கம தர்கா நகர் சம்பவம் உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களின் போது சட்டத்தரணிகள் சங்கம் தமது சேவையை வழங்கியதாகவும் அத்தகைய சந்தர்ப்பங்களில் சட்டமா அதிபர் திணைக்களமோ எந்தவொரு தரப்பினரோ அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை எனவும் தெரிவித்த ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் ஜயசூரிய, இவ்வாறான எதிர்ப்பு வௌியிடப்படுவது இதுவே வரலாற்றில் முதற்தடவை எனவும் சுட்டிக்காட்டினார்.
தற்போது 100 Human immunoglobulin குப்பிகள் குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் உள்ளதாகவும் அவை உரிய வகையில் சோதனைக்கு உட்படுத்தப்படவில்லை எனவும் ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் ஜயசூரிய மன்றில் தெரிவித்தார்.
குப்பிகளை கொழும்பு மருத்துவக் கல்லூரியின் நுண்ணுயிரியல் துறைக்கு ஒப்படைத்து பரிசோதனை செய்யுமாறு அவர் நீதிமன்றத்திடம் இதன்போது கோரிக்கை விடுத்தார்.
ஜனாதிபதி சட்டத்தரணி ஆஜராகியுள்ளமை தொடர்பில் சிக்கல் நிலவுவதால், இந்த கோரிக்கையை நடைமுறைப்படுத்துவதிலும் சிக்கல் ஏற்படுமென பிரதி சொலிஸிட்டர் ஜெனரல் சுட்டிக்காட்டினார்.
சர்ச்சைக்குரிய மருந்து கொடுக்கல் வாங்கல் முறைமை தொடர்பில் அமைச்சரவை பத்திரம் முன்வைக்கப்பட்ட பின்னர் அந்த நடைமுறையை பின்பற்ற வேண்டாமென ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் ஜயசூரிய இதன்போது தெரிவித்தார்.
You must be logged in to post a comment.