Sangathy
News

மனித மூளையில் சிப் பொருத்தி சோதனை; மருத்துவத்தில் ஒரு மைல் கல்

மனித மூளையில் ”சிப் பொருத்துதல்” வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்காவின் முன்னணி தொழிலதிபரும் உலக கோடீஸ்வரர்களில் ஒருவருமான எலான் மஸ்க் (Elon Musk) தெரிவித்துள்ளார்.

எலான் மஸ்கின் நியூராலிங்க் (Neuralink) எனும் நிறுவனம் மனித மூளை, நரம்பு மண்டலம், முதுகுத் தண்டுவடம் ஆகியவற்றின் செயற்பாடுகளை உயர் தொழில்நுட்பத்துடன் ஆராய்ச்சி செய்ய தொடங்கப்பட்டது.

கடந்த வருடம், அமெரிக்க உணவு மற்றும் மருந்துகள் நிர்வாகத்துறை (FDA), நியூராலிங்க் நிறுவனத்திற்கு, மனித மூளையில் சிப் (chip) எனப்படும் மின்னணு சில்லுகளை பொருத்தி அவற்றின் மூலம் மனித மூளையின் திறனை மேம்படுத்தவும், நோய்களின்றி வாழ வழி செய்யவும் ஆராய்ச்சி மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது.

தற்போது நியூராலிங்க் நிறுவனத்தின் முதல் முயற்சியாக ஒரு மனிதரின் மூளையில் “சிப் பொருத்துதல்” வெற்றிகரமாக நடந்துள்ளதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

நியூராலிங்க் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட ஒரு ரோபோவின் துணையுடன், மிக துல்லியமாக நடைபெற்ற அறுவை சிகிச்சை முறையில் இந்த சிப் பொருத்தப்பட்டுள்ளது.

முதற்கட்ட பரிசோதனைகளில் இந்த சிப்பில் இருந்து மின் சமிக்ஞைகளின் பரிமாற்றம் (electrical signal conduction) நடக்க தொடங்கிவிட்டதற்கான அறிகுறிகள் தென்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பக்கவாதம் போன்ற மனிதர்களை செயலிழக்க செய்யும் நோய்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கை, கால்கள், முகம் உள்ளிட்ட உறுப்புகள் அசைவற்று போய் விடும். அந்நிலையில், உள்ளவர்களுக்கு அவர்களின் மூளை, உடல் உறுப்புகளுக்கு எண்ணங்கள் மற்றும் கட்டளைகளை உடனுக்குடன் அனுப்பும் பரிமாற்றமும் நின்று விடும்.

அத்தகைய குறைபாடு உள்ளவர்களின் மூளையில் மின்னணு சிப் பொருத்தி, அவற்றை எண்ணங்களின் மூலம் கட்டுப்படுத்தி, அதன் பயனாக உறுப்புகளை செயற்பட வைக்க முயல்வதே இந்த ஆராய்ச்சியின் முக்கிய நோக்கங்களில் ஒன்று.

தனிப்பட்ட பங்குதாரர்களை கொண்டு மஸ்க் உருவாக்கியுள்ள நியூராலிங்க், தற்போது $5 பில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்த சோதனையை தொடங்கியதாகவும், சிப் பொருத்தப்பட்டிருக்கும் அந்த நபர் உடல்நலன் தேறி வருவதாகவும் மஸ்க் குறிப்பிட்டுள்ளார். மேலும், சோதனைக்கு உட்படுத்தப்பட்ட நபரின் முதற்கட்ட மருத்துவ அறிக்கை, அவருடைய நியூரான் ஸ்பைக்குகள் நேர்மறையான அறிகுறிகளைக் காட்டுவதாகவும் எலான் மஸ்க் குறிப்பிட்டுள்ளார்.

நியூராலிங்கின் முதல் தயாரிப்பின் பெயர் டெலிபதி (Telepathy) என மஸ்க் தெரிவித்துள்ளார். இந்த டெலிபதி உபகரணமானது எண்ணங்கள் மூலம் தொலைபேசி மற்றும் கணினியை கட்டுப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக கை, கால் போன்ற உறுப்புகளை இழந்தவர்களின் பயன்பாட்டுக்காக இந்த உபகரணம் வழங்கப்படும் என்றும் எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.

Related posts

தனுஷ்க குணதிலக்க மீதான 3 குற்றச்சாட்டுகள் வாபஸ்

Lincoln

அரச நிதியை தவறாக பயன்படுத்தியது நிரூபிக்கப்பட்டால் பதவி விலக தயார் – எதிர்க்கட்சித் தலைவர் சவால்

Lincoln

COPA frowns on FEB’s failure to take prompt action against errant official

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy