Sangathy
News

ராஜிவ் காந்தி கொலை வழக்கு : முருகன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோர் மனுத்தாக்கல் செய்தால் பரிசீலிக்கப்படும் – சென்னை உயர் நீதிமன்றம்

Colombo (News 1st) இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் விடுவிக்கப்பட்டு முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ள முருகன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய மூவரும் தனியாக மனுத்தாக்கல் செய்தால் அது தொடர்பில் பரிசீலிக்கப்படும் என சென்னை உயர் நீதிமன்றம் நேற்று(04) அறிவித்துள்ளது.  

நோய்வாய்ப்பட்டுள்ள தனது தாயை கவனிப்பதற்காக தன்னை இலங்கைக்கு அனுப்பி வைக்க உத்தரவிடக் கோரி சாந்தன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த வழக்கு நேற்று(04) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

கடந்த வழக்கு விசாரணையின் போது சாந்தன் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டு, அது தொடர்பான ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

அதற்கமைய, சாந்தனின் உடலை விரைவாக இலங்கைக்கு அனுப்புவதற்கான பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டு, அது தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்யுமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு, நேற்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, சாந்தனின் உடல் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுவிட்டதாக தமிழக அரசாங்கத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டமைக்கு அமைய, சாந்தனின் மனுவை முடித்து வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதன்போது, ராஜிவ் காந்தி கொலை வழக்கில் விடுவிக்கப்பட்டு திருச்சி முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழர்களான முருகன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோர் தங்களை இலங்கைக்கு திரும்ப அனுப்பக்கோரி இந்திய உள்துறை அமைச்சுக்கு விண்ணப்பித்துள்ளமைக்கு அமைய அதற்கான நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்ள மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என தமிழக அரசாங்கத்தினால் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதற்கு பதிலளித்த மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், மூவரும் தங்களுக்கான ஆவணங்களை வழங்கக்கோரி இலங்கை தூதரகத்தை நாடினார்களா என்பது குறித்து தெரியவில்லை என்று கூறினார்.

இதையடுத்து, குறித்த 3 பேர் தொடர்பாகவும் இந்த வழக்கில் எந்த உத்தரவும் பிறப்பிக்க இயலாது என தெரிவித்த நீதிபதிகள், மூவரும் தனியாக மனுத்தாக்கல் செய்தால் அது தொடர்பில் பரிசீலிக்கப்படும் என தெரிவித்தனர்.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்குடன் தொடர்புடைய 7 பேரும் கடந்த 32 ஆண்டுகளாக சிறைத்தண்டனை அனுபவித்த நிலையில், பேரறிவாளன் முதலில் விடுதலை செய்யப்பட்டிருந்தார்.

இதனையடுத்து சாந்தன் உள்ளிட்ட 6 பேரும் 2022 ஆம் ஆண்டு நவம்பர் 11 ஆம் திகதி இந்திய உச்சநீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்டனர்.

இவர்களில் நளினி, ரவிச்சந்திரனை தவிர முருகன், ரொபர்ட் பயஸ், ஜெயக்குமார், சாந்தன் ஆகியோர் திருச்சி மத்திய சிறை வளாகத்திலுள்ள சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

FSP opposes move to make Central Bank of Sri Lanka independent of Parliament

Lincoln

Racism in Cuba: Banned by law, alive on the streets

Lincoln

Independence Day celebrations showed world Sri Lanka has stabilised– Prez.

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy