Sangathy
Health

நம் உடல் உறுப்புகளின் அருமை தெரியுமா..?

பல ஆயிரம் கோடி அணுக்கள் உள்ள நம் உடல் ஓர் உயிரணுவில் இருந்துதான் உருவாகிறது என்றால் எவ்வளவு வியப்பாக உள்ளது. ஓர் உயிரணு இரண்டாகப் பிரிந்து பிறகு நான்கு, எட்டு, பதினாறு எனப் பிரிந்து திசுக்கள், உடல் உறுப்புகள், ரத்தக் குழாய்கள், தோல், தசை, கொழுப்பு எனப் பல கூறுகளாகப் பிரிகின்றன. நம் உடலுக்குள் கண்டுபிடிக்கப்பட முடியாத, இன்னும் சரியாக விவரிக்கப்பட முடியாத விந்தைகள் பல உள்ளன.

நாம் அனைவரும் பணம், பதவி, பட்டம் என்று ஓர் எல்லையை வகுத்து இயங்கிக் கொண்டிருக்கிறோம். ஆனால் நம் உடலின் இயல்புகள் பற்றியோ அல்லது, ஓர் உறுப்பு, செயல்படாமல் போனால் என்ன ஆகும் என்பது பற்றியோ புரிந்துக் கொள்ள முயல்வதில்லை, அதற்கு நாம் நேரம் ஒதுக்குவதுமில்லை.

“சிறுநீரகத்தின் மதிப்பு”, அது பழுதுபட்டு, நினைத்த நேரத்தில் தண்ணீர் கூட குடிக்க முடியாமல் துயரப்படும் நோயாளிகளுக்குத்தான் தெரியும். “இதயத்தின் மதிப்பு” அதனால் இடராகிச் சிறிது தொலைவு நடந்தால் கூட மூச்சு வாங்கும் நோயாளிக்குத்தான் தெரியும், கை கால்கள் நடக்க முடியாமல் தடுமாறும் நோயாளிக்குத்தான் தெரியும் “மூளையின் அருமை”. எனவே கீழ்வரும் பட்டியலின் வாயிலாக

நம் உடல் உறுப்புகளின் மதிப்பை தெரிந்து கொள்ளலாம்.

1. சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சைக்குரூ.10-20 லட்சங்கள்

2. கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சைக்கு ரூ.25-30 லட்சங்கள்

3. நுரையீரல் மாற்று அறுவைச் சிகிச்சைக்கு ரூ. 25-30 லட்சங்கள்

4. இதய மாற்று அறுவைச் சிகிச்சைக்கு ரூ. 20-25 லட்சங்கள்

5. கணைய மாற்று அறுவைச் சிகிச்சைக்கு ரூ. 15-20 லட்சங்கள்

6. மூச்சுக்குழாய் மாற்று அறுவைச் சிகிச்சைக்கு ரூ. 5 லட்சங்கள்

7. விழித்திரை மாற்று அறுவைச் சிகிச்சைக்கு ரூ.1 லட்சம்

8. தோல் மாற்று அறுவைச் சிகிச்சைக்கு ரூ. 1 லட்சம்

உடல் உறுப்புகளின் மதிப்பை இப்போது உணர்ந்து விட்டீர்களா? இவ்வளவு லட்சங்கள் நம் கையில் இருந்தால் மட்டும் போதும், இந்த உறுப்புகளை வாங்கிப் பொருத்திக் கொள்ளலாம் என்று மட்டும் எண்ணிவிடாதீர்கள். இந்த உறுப்புகள் ஒருவருக்குப் பொருத்தமானதாக இருக்கிறதா? இல்லையா? என்பதைக் கண்டறிவதே கடினம்.

நாம் பேணிப் பாதுகாக்க வேண்டியவை விலைமதிப்பில்லா நம் உடல் உறுப்புகளையே, பணத்தையல்ல. பணம் தேவைதான்…! பணமே வாழ்க்கை அல்ல. நாம் சம்பாதித்த பணத்தால், உடல் உறுப்புகளை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டுவர முடியாது என்பதைபுரிந்து கொள்ளுங்கள், உடல் உறுப்புகளைப் பேணிப்பாதுகாக்க முயலுங்கள். உடலின் இயல்புகள் பற்றித் தெரிந்து கொண்டால்தான், சிக்கல்கள் ஏற்படும்போது அதை எளிதாகக் கண்டறியலாம்.

இதயம் துடிக்கும் அளவு

ஆண்களுக்கு இதயத்துடிப்பு, சராசரியாக நிமிடத்திற்கு 70 முதல் 80 முறை இருக்கிறது, அதேபோல் பெண்களுக்கு நிமிடத்திற்கு 72 முதல் 82 முறை துடிக்கிறது. பொதுவாக, ஓய்வு நேரத்தில் குறைந்த அளவும், ஏதேனும் பயிற்சிகள் அல்லது வேலை செய்யும்போது அதிகமாகவும் இதயம் துடிக்கிறது. உடலுக்குத் தேவையான ரத்த ஓட்டத்தைக் கொடுப்பதற்காகத்தான் இந்த ஏற்பாடு.

மனிதன் மூச்சிழுக்கும் அளவு

ஒரு நிமிடத்திற்கு நாம் 12 முதல் 20 முறை மூச்சிழுத்து விடுகிறோம். நாம் செய்யும் வேலைகளுக்கு ஏற்றவாறு இதன் அளவும் வேறுபடுகிறது. மூக்கின் வழியாக உள்ளே இழுக்கப்படும் காற்று மூச்சுக்குழாய்கள் வழியாக நுரையீரலைச் சென்றடைகிறது. மூச்சுக் காற்றை உள்ளே இழுக்கவும், வெளியேற்றவும் உதரவிதானம், மார்பக எலும்புகள் மற்றும் அதைச் சுற்றியுள்ள தசைகள் உதவுகின்றன.

உடலில் உள்ள எலும்புகளின் எண்ணிக்கை

குழந்தை, பிறக்கும்போது பொதுவாக 270 எலும்புகளுடன் பிறக்கிறது. பருவத்திற்கு வரும்போது 206 முதல் 213 எலும்புகளாக ஒன்றோடொன்று இணைந்து அவை எண்ணிக்கையில் மட்டும் குறைகின்றன. சிலருக்கு விலா எலும்புகளும், முதுகெலும்புகள் மற்றும் அதன் இலக்கங்களும் மாறுபடுவதே இந்த மாறுபாட்டிற்கான முக்கியக்காரணம்.

உடலில் கண்களின் பங்கு

மனிதன் இந்த உலகத்தைப் பார்த்து ரசித்து வாழ்கையை வாழ இயற்கை நமக்கு வழங்கிய கொடை கண்கள். இந்த கண்களை நம் முன்னோர்கள் மிகவும் பக்குவத்தோடு பாதுகாத்தார்கள். ஆனால் இன்றைய காலகட்டத்தில் நாம் அந்த கண்களை ஒரு பொருட்டாகக்கூட மதிப்பது இல்லை.

அதிகப்படியான செல்போன் பயன்பாடு, கணினி பயன்பாடு உள்ளிட்ட பல காரணங்களால் கண்கள் பாதிக்கப்படுகின்றன. அது மட்டுமின்றி முறையற்ற உணவுப் பழக்கத்தால், கண்களுக்குத் தேவையான சத்துக்கள் கிடைப்பது இல்லை. இதனால் இன்று சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கண் தொடர்பான நோய்கள், பார்வைக் குறைபாடு உள்ளிட்ட பல பிரச்சினைகளுக்கு ஆளாகின்றனர்.

மனித உடலை இயற்கை கட்டமைத்து இருப்பதே ஒரு வியக்கத்தக்க விஷயம்தான். உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்பும் அதன் பணியை சரியான நேரத்தில் முறையாக செய்யவில்லை என்றால் என்ன ஆகும்? சிந்தித்துப் பாருங்கள். நாம் ஓய்வெடுக்கும் பொழுதும், உடல் அதன் பணியைத் தலையாய கடமை என நினைத்துக் கண்ணியத்துடன் பணியாற்றுகிறது.

அந்த உடல் உறுப்புகளுக்கு நாம் கொடுக்க வேண்டிய வெகுமதி அவற்றின் ஆரோக்கியத்தைப் பேணிப் பாதுகாப்பதுதான். அது மட்டுமின்றி, உங்கள் குடும்பத்தினருக்கோ அல்லது இந்தச் சமுதாயத்திற்கோ நீங்கள் எதையாவது பரிசாக வழங்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள் என்றால், உங்கள் ஆரோக்கியத்தைப் பரிசாக வழங்குங்கள். அதுவே சிறந்த வாழ்க்கைக்கு வழிவகை செய்யும்.

Related posts

Permanent Cure for HIV/AIDS?

Lincoln

WHO reports record daily increase in global coronavirus cases, up over 228,000

Lincoln

Coronavirus: US reports 1,000 deaths in one day, California passes 4 lakh cases

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy