Sangathy
Sports

மும்பை அணிக்கு பதிலடி கொடுக்குமா டெல்லி? : இன்று மீண்டும் மோதல்..!

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று (சனிக்கிழமை) இரண்டு லீக் ஆட்டங்கள் அரங்கேறுகின்றன. டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் மாலை 3.30 மணிக்கு தொடங்கும் 43-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.

டெல்லி அணி இதுவரை 9 ஆட்டங்களில் ஆடி 4 வெற்றி, 5 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்றுள்ளது. கடந்த ஆட்டத்தில் டெல்லி அணி 4 ரன் வித்தியாசத்தில் குஜராத்தை வீழ்த்தியது. அந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்து 224 ரன்கள் குவித்த டெல்லி எதிரணியை 220 ரன்னுக்கு கட்டுப்படுத்தி ‘திரில்’ வெற்றியை தனதாக்கியது. முந்தைய 4 ஆட்டங்களில் 3-ல் வெற்றியை ருசித்த நம்பிக்கையோடு இந்த ஆட்டத்தில் களம் இறங்குகிறது.

டெல்லி அணியில் பேட்டிங்கில் கேப்டன் ரிஷப் பண்ட் அசத்தி வருகிறார். டிரிஸ்டான் ஸ்டப்ஸ், ஜேக் பிராசர் மெக்குர்க், ஆல்-ரவுண்டர் அக்ஷர் பட்டேல் ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர். தொடக்க வீரர் பிரித்வி ஷா கணிசமான பங்களிப்பை அளிக்க வேண்டியது அவசியமானதாகும். மோசமான பார்ம் காரணமாக கடந்த ஆட்டத்தில் வெளியில் வைக்கப்பட்ட டேவிட் வார்னருக்கு பதிலாக களம் கண்ட ஷாய் ஹோப் சோபிக்காததால் வார்னருக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்கலாம்.

பந்து வீச்சில் சுழற்பந்து வீச்சாளர்கள் குல்தீப் யாதவ், அக்ஷர் பட்டேல், வேகப்பந்து வீச்சாளர்கள் முகேஷ் குமார், கலீல் அகமது ஆகியோர் வலுசேர்க்கிறார்கள். அன்ரிச் நோர்டியா அதிக ரன்களை விட்டுக்கொடுப்பது தலைவலியாக இருக்கிறது. இம்பேக்ட் வீரராக முந்தைய ஆட்டத்தில் ஆடிய ராசிக் சலாம் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார். அவர் தனது இடத்தை தக்கவைத்து கொள்வார்.

5 முறை சாம்பியனான மும்பை அணி இந்த சீசனில் தடுமாறி வருகிறது. அந்த அணி 8 ஆட்டங்களில் ஆடி 3 வெற்றி, 5 தோல்வி கண்டு 6 புள்ளிகளை பெற்றுள்ளது. மும்பை அணியில் பேட்டிங்கில் ரோகித் சர்மா, திலக் வர்மா, சூர்யகுமார் பார்மில் உள்ளனர். இஷான் கிஷன், டிம் டேவிட், கேப்டன் ஹர்திக் பாண்ட்யா ஆகியோரும் சிறப்பாக செயல்பட்டால் மேலும் வலுப்பெறும். பந்து வீச்சில் ஜஸ்பிரித் பும்ரா, ஜெரால்டு கோட்ஜீ பலம் சேர்க்கிறார்கள். ஆனால் மற்ற பவுலர்களிடம் இருந்து போதிய ஒத்துழைப்பு இல்லாதது பாதகமாக உள்ளது.

கடந்த ஆட்டத்தில் ராஜஸ்தானிடம் 9 விக்கெட் வித்தியாசத்தில் கண்ட மோசமான தோல்வியை மறந்து வெற்றிப் பாதைக்கு திரும்ப மும்பை முனைப்பு காட்டும். இந்த சீசனில் தொடக்கத்தில் தொடர்ச்சியாக 3 தோல்விக்கு பிறகு டெல்லியை 29 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்ததால் மும்பை அணி கூடுதல் நம்பிக்கையுடன் களம் காணும். ஆனால் முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுக்க டெல்லி அணி வரிந்து கட்டும். எனவே இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இவ்விரு அணிகளும் 34 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 19 ஆட்டங்களில் மும்பையும், 15 ஆட்டங்களில் டெல்லியும் வெற்றி கண்டுள்ளன.

லக்னோவில் இரவு 7.30 மணிக்கு ஆரம்பமாகும் மற்றொரு லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்-ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் சந்திக்கின்றன.

முன்னாள் சாம்பியனான ராஜஸ்தான் அணி 8 ஆட்டங்களில் ஆடி 7 வெற்றி, ஒரு தோல்வியுடன் (குஜராத் அணிக்கு எதிராக) கம்பீரமாக முதலிடத்தில் பயணிக்கிறது. அந்த அணியின் பேட்டிங்கில் ரியான் பராக், கேப்டன் சஞ்சு சாம்சன், ஜோஸ் பட்லர், ஜெய்ஸ்வால் ஆகியோர் பட்டையை கிளப்புகிறார்கள். பந்து வீச்சில் யுஸ்வேந்திர சாஹல், டிரென்ட் பவுல்ட், அவேஷ் கான், சந்தீப் ஷர்மா உள்ளிட்டோர் கைகொடுக்கிறார்கள்.

லக்னோ அணி 8 ஆட்டங்களில் ஆடி 5 வெற்றி, 3 தோல்வி கண்டுள்ளது. உள்ளூர் மற்றும் வெளியூரில் நடைபெற்ற கடந்த 2 ஆட்டங்களில் தொடர்ச்சியாக சென்னையை வீழ்த்திய அந்த அணி ‘ஹாட்ரிக்’ வெற்றியை ருசிக்கும் ஆவலில் உள்ளது. லக்னோ அணியில் பேட்டிங்கில் கேப்டன் லோகேஷ் ராகுல், நிகோலஸ் பூரன், கடந்த ஆட்டத்தில் சதம் விளாசிய மார்கஸ் ஸ்டோனிஸ், குயின்டான் டி காக்கும், பந்து வீச்சில் யாஷ் தாக்குர், மொசின் கான், ரவி பிஷ்னோய், குருணல் பாண்ட்யாவும் நம்பிக்கை அளிக்கிறார்கள்.

ஜெய்ப்பூரில் நடந்த தனது முதலாவது லீக் ஆட்டத்தில் 20 ரன் வித்தியாசத்தில் ராஜஸ்தானிடம் தோற்று இருந்த லக்னோ அணி அதற்கு பழிதீர்க்க எல்லா வகையிலும் முயற்சிக்கும். அதேநேரத்தில் தனது ஆதிக்கத்தை நிலை நாட்ட ராஜஸ்தான் அணி முழு பலத்தையும் வெளிப்படுத்தும். எனவே இந்த மோதலில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது. இன்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் வாகை சூடினால் ஏறக்குறைய பிளே-ஆப் சுற்றை எட்டி விடும்.

இவ்விரு ஆட்டங்களையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

Related posts

Asia Cup win gave all Sri Lankans a boost – Sanga

Lincoln

Milne, Bowes derail Sri Lanka to hand New Zealand series-levelling win

Lincoln

Mahinda battle against unbeaten Petes for final spot

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy