பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் ரெய்டு..!

லோக்சபா தேர்தலை ஒட்டி பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில், கைதிகள் அறையில் போலீசார் சோதனை நடத்தினர். இதில், பணம், கத்திகள், மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

கர்நாடகாவில் உள்ள 28 லோக்சபா தொகுதிகளுக்கு, இரண்டு கட்டமாக தேர்தல் நடக்கிறது. பெங்களூரு சென்ட்ரல், பெங்களூரு வடக்கு, பெங்களூரு, பெங்களூரு ரூரல் உட்பட 14 தொகுதிகளுக்கு, வரும் 26 ம் திகதி முதல் கட்டமாக தேர்தல் நடக்கிறது.

இதற்கான ஏற்பாடுகளை மாநில தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. எந்தவித பிரச்னையும் இன்றியும், அசம்பாவித சம்பவங்களை தடுக்கவும், மாநில போலீசார் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். ரவுடிகள், பிரச்னை ஏற்படுத்தும் வகையில் பேசுபவர்களை கண்டறிந்து, மாவட்டத்தை விட்டு வெளியேற்றும் பணிகளும், ஒரு பக்கம் தீவிரமாக நடந்து வருகிறது.

பெங்களூரில் ரவுடிகள் வீடுகளிலும், போலீசார் சோதனை நடத்தினர். ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. ரவுடிகளை, போலீஸ் நிலையங்களுக்கு அழைத்து சென்று, தேர்தல் நேரத்தில் எந்த பிரச்னையும் செய்ய கூடாது என்றும், அப்படி செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் லோக்சபா தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு உதவ வேண்டும் என்று, பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்தபடியே, ரவுடிகள் சிலர் வெளியே இருக்கும் கூட்டாளிகளுக்கு உத்தரவிட்டதாகவும், அதன்படி ரவுடிகளின் கூட்டாளிகள் சிலர், வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்து வருவதாகவும், பெங்களூரு போலீஸ் கமிஷனர் தயானந்தாவுக்கு தகவல் கிடைத்தது.

இதனால், சிறையில் சோதனை நடத்தும்படி போலீசாருக்கு, கமிஷனர் தயானந்தா உத்தரவிட்டு இருந்தார். அதன்படி நேற்று முன்தினம் மாலை சிறைக்குள் சென்ற 100க்கும் மேற்பட்ட போலீசார், கைதிகளின் அறைகளில் அங்குலம், அங்குலமாக சோதனை நடத்தினர்.

இந்த சோதனையின் போது கைதிகளிடம் இருந்து 40,000 ரூபாய் ரொக்கம், மூன்று கத்திகள், ஐந்து மொபைல் போன்கள் சிக்கின.

இதுகுறித்து போலீஸ் கமிஷனர் தயானந்தா நேற்று அளித்த பேட்டி :

“பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கும் ரவுடிகள் சிலர், சிறைக்குள் இருந்து கொண்டே, கூட்டாளிகளிடம் மொபைல் போனில் பேசி, வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய சொல்வதாகவும், தேர்தல் நடத்தை விதிமீறலுக்கு வழிவகுத்து கொடுப்பதாகவும் தகவல் கிடைத்தது.

கடந்த காலங்களில் சிறைக்குள் கஞ்சா, மொபைல் போன்கள், கத்திகளும் பறிமுதல் செய்யப்பட்டன. தேர்தல் நேரம் என்பதால் சிறையில் சோதனை நடத்தும்படி, போலீசாருக்கு உத்தரவிட்டேன். அதன்படி நடத்திய சோதனையில், பணம், கத்திகள், மொபைல் போன்கள் சிக்கியுள்ளன.

தேர்தல் நேரத்தில் அமைதியை சீர்குலைப்பவர்கள் பெயர், ரவுடி பட்டியலில் சேர்க்கப்படும்.

முதல்கட்ட தேர்தலை ஒட்டி வரும் 24 ஆம் திகதி நள்ளிரவு 12:00 முதல் 26 ஆம் திகதி நள்ளிரவு 12:00 மணி வரை, பெங்களூரு நகரில் 144 தடை உத்தரவு அமலில் இருக்கும். தேர்தலை அமைதியாக நடத்த, அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும்.

தேர்தல் தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளுடன் இணைந்து, சில ஆலோசனை கூட்டங்களும் நடத்தி உள்ளோம்.

நகரின் முக்கிய பகுதிகளை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். போலீசாரின் கொடி அணிவகுப்பும் நடத்தப்பட்டது.

ராமேஸ்வரம் கபே ஹோட்டல் குண்டுவெடிப்பு பற்றி, என்.ஐ.ஏ., விசாரித்து வருவதால், அந்த வழக்கு பற்றி கருத்து தெரிவிக்க முடியாது.”

இவ்வாறு அவர் கூறினார்.

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles