Sangathy
Sports

வெற்றி நடை தொடருமா? : சென்னை-பஞ்சாப் அணிகள் இன்று பலப்பரீட்சை..!

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று நடக்கும் 49-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பஞ்சாப் கிங்சை எதிர்கொள்கிறது.

5 முறை சாம்பியனான சென்னை அணி இந்த சீசனில் நிலையற்ற ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. அந்த அணி 9 ஆட்டங்களில் ஆடி 5 வெற்றி, 4 தோல்வியுடன் 10 புள்ளி பெற்றுள்ளது. முதல் 2 ஆட்டங்களில் வெற்றி, அடுத்த 2 ஆட்டங்களில் தோல்வி என்று மாறி, மாறி வெற்றி, தோல்வியை சந்தித்து வரும் சென்னை அணி சொந்த மண்ணில் நடந்த முந்தைய ஆட்டத்தில் 78 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத்தை அதட்டியது. அந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்து 212 ரன்கள் குவித்ததுடன் எதிரணியை 134 ரன்னில் சுருட்டி அசத்தியது. அந்த உற்சாகத்துடன் இந்த ஆட்டத்தில் சென்னை அணி களம் இறங்குகிறது. சென்னையில் நடைபெறும் 6-வது லீக் ஆட்டம் இதுவாகும். இங்கு சென்னை அணி 5 ஆட்டங்களில் ஆடி 4-ல் வெற்றி, ஒன்றில் தோல்வி (லக்னோவுக்கு எதிராக) கண்டுள்ளது.

சென்னை அணியில் பேட்டிங்கில் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் (ஒரு சதம், 3 அரைசதம் உள்பட 447 ரன்), ஷிவம் துபே (350), டேரில் மிட்செல் ஆகியோர் நன்றாக செயல்படுகிறார்கள். தொடர்ந்து சொதப்பி வரும் அனுபவம் வாய்ந்த ரஹானே சிறப்பான பங்களிப்பை அளிக்க வேண்டியது அவசியமானதாகும். பந்து வீச்சில் முஸ்தாபிஜூர் ரகுமான், பதிரானா, துஷர் தேஷ்பாண்டே, தீபக் சாஹர், ரவீந்திர ஜடேஜா நம்பிக்கை அளிக்கிறார்கள்.

பஞ்சாப் கணிக்க முடியாத அணியாக விளங்குகிறது. அந்த அணி இதுவரை 9 ஆட்டங்களில் ஆடி 3 வெற்றி, 6 தோல்வியுடன் 6 புள்ளி பெற்றுள்ளது. எஞ்சிய 5 ஆட்டங்களும் அந்த அணிக்கு மிகவும் முக்கியமானதாகும். ஒன்றில் தோற்றாலும் அந்த அணியின் அடுத்த சுற்று (பிளே-ஆப்) வாய்ப்பு பொய்த்து போகும். எனவே அந்த அணி வாழ்வா-சாவா? நெருக்கடிக்கு மத்தியில் அடியெடுத்து வைக்கும்.

பஞ்சாப் அணியில் பேட்டிங்கில் ஷசாங்க் சிங், பிரப்சிம்ரன் சிங், பேர்ஸ்டோ, அஷூதோஷ் ஷர்மா ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். விக்கெட் கீப்பர் ஜிதேஷ் ஷர்மா மட்டும் தொடர்ந்து தடுமாறுகிறார். பந்து வீச்சில் ரபடா, ஹர்ஷல் பட்டேல், அர்ஷ்தீப் சிங், சாம் கர்ரன் மிரட்டக்கூடியவர்கள். சுழற்பந்து வீச்சாளர்கள் ஹர்பிரீத் பிரார், ராகுல் சாஹர் ஆகியோர் ஜொலித்தால் பந்து வீச்சு மேலும் வலுப்பெறும். தோள்பட்டை காயம் காரணமாக கடந்த 5 ஆட்டங்களை தவற விட்ட கேப்டன் ஷிகர் தவான் இந்த ஆட்டத்துக்கு திரும்புவாரா? என்பது குறித்து இன்று முடிவு செய்யப்படும் என்று அந்த அணியின் வேகப்பந்து வீச்சு பயிற்சியாளர் லாங்வெல்ட் தெரிவித்தார். இதனால் அவர் இன்றைய ஆட்டத்தில் ஆடுவது சந்தேகம் தான் என்று தெரிகிறது.

கடந்த ஆட்டத்தில் பஞ்சாப் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தாவை புரட்டியெடுத்தது. அந்த ஆட்டத்தில் 262 ரன் இலக்கை எட்டிப்பிடித்து 20 ஓவர் போட்டியில் புதிய வரலாறு படைத்தது பஞ்சாப்பின் நம்பிக்கையை நிச்சயம் அதிகரித்து இருக்கும். தனது உத்வேகத்தை தொடர பஞ்சாப் அணியும், உள்ளூரில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட சென்னை அணியும் வரிந்து கட்டும் என்பதால் இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இவ்விரு அணிகளும் இதுவரை 28 முறை நேருக்கு நேர் சந்தித்து இருக்கின்றன. இதில் 15 ஆட்டத்தில் சென்னையும், 13 ஆட்டத்தில் பஞ்சாப்பும் வெற்றி கண்டுள்ளன.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

சென்னை: ரஹானே, ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), டேரில் மிட்செல், ஷிவம் துபே, மொயீன் அலி, ரவீந்திர ஜடேஜா, டோனி, தீபக் சாஹர், துஷர் தேஷ்பாண்டே, முஸ்தாபிஜூர் ரகுமான், பதிரானா.

பஞ்சாப்: பிரப்சிம்ரன் சிங், பேர்ஸ்டோ, ரிலீ ரோசவ், ஷசாங்க் சிங், சாம் கர்ரன் (கேப்டன்), ஜிதேஷ் ஷர்மா, அஷூதோஷ் ஷர்மா, ஹர்பிரீத் பிரார், ஹர்ஷல் பட்டேல், ரபடா, ராகுல் சாஹர்.

இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

Related posts

Budding athletes beat odds at chaotic Western Province Schools Athletics Championship

Lincoln

DC seal tight finish to keep RCB winless

Lincoln

Chetan Sharma resigns as India’s chairman of selectors after TV sting operation

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy