பாகிஸ்தான் நாட்டில் சிறுபான்மையினர்களாக பல இந்து மக்கள் இருந்து வருகிறார்கள். பெண்களையும், சிறுமிகளையும் அங்கு கட்டாயப்படுத்தி இஸ்லாம் மதத்திற்கு மாற்றுவதாக பாராளுமன்றத்தில் உடைத்து பேசி இருக்கிறார் இந்து மத அமைச்சரான தனேஷ் குமார்.
அண்டை நாடான பாகிஸ்தான் இஸ்லாமிய நாடாக இருக்கிறது. என்னதான், இஸ்லாமிய நாடாக இருந்தாலும் அங்கு இந்து, சீக், கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர்களும் இருந்து வருகிறார்கள். சிறுபான்மையினர்களாக இருக்கும் வேறு மதத்தை சேர்ந்தவர்களுக்கு எதிரான பல சம்பவங்கள் நடந்து வருகிறது.
மேலும், பாகிஸ்தான் நாட்டில் இருக்கும் வேற்றுமத தளங்களை இடித்தும் வருகிறது அந்நாடு. சமீபத்தில், பாகிஸ்தான் நாட்டில் இருந்த இந்துக் கோவில் இடித்து தரைமட்டமாக்கியது. அதுமட்டுமல்லாது, பாகிஸ்தானில் கட்டாய மதமாற்றமும் தொடர்ந்து நடந்து வருகிறது. பாகிஸ்தான் நாட்டின் இந்த செயலுக்கு சர்வதேச அமைப்புகள் பல எச்சரிக்கைகளை வெளியிட்டு வருகின்றன.
குறிப்பாக 18 வயதிற்கு குறைவான மைனர் சிறுமிகள் கட்டாய மதமாற்றம் செய்யப்படுவதாகப் புகார்களும் எழுந்து வருகின்றன. அங்கு சிறுபான்மைப் பெண்களை, குறிப்பாக இந்துக்களைக் கட்டாயமாக மதமாற்றம் செய்வது எப்படி முழு வீச்சில் நடந்து வருகிறது என்பதைப் பாகிஸ்தானில் உள்ள இந்து அமைச்சர் நாடாளுமன்றத்தில் பேசிய வெட்டவெளிச்சமாக்கி இருக்கிறார்.
பாகிஸ்தான் அமைச்சரும் மனித உரிமை ஆர்வலருமான தனேஷ் குமார் பல்யானி, இந்து சிறுமிகள் கட்டாய மதமாற்றம் செய்யப்படுவதாக கூறியிருக்கிறார். இந்த கட்டாய மதமாற்றத்தினால் சிந்து மாகாணத்தில் நிலைமை மோசமாக இருப்பதாக சாடிய அமைச்சர் தனேஷ், இந்து குழந்தைகள் மற்றும் பெண்களை கட்டாயப்படுத்தி மதமாற்றம் நடப்பதாக கூறினார்.
அவர் மேலும் கூறுகையில், “பிரியா குமாரி கேஸை பாருங்கள். ஆறு வயதுக் குழந்தையைக் கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்துள்ளனர். அவர் கடத்தப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆகிறது. இருப்பினும், குற்றவாளிகள் மீது அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சில கேவலமான நபர்கள் இதுபோன்ற செயல்களால் பாகிஸ்தானை அவமதித்து விட்டனர்.
இஸ்லாமியர்களின் புனித நூலான குரானில், மதத்தில் எந்த நிர்ப்பந்தமும் இருக்கக்கூடாது என்றே இருக்கிறது. உங்கள் மார்க்கம் உங்களுக்கு இருக்கிறது. எனது மார்க்கம் எனக்கு இருக்கிறது. இந்த கேவலமானவர்கள் குரானைக்கூட மதிக்கவில்லை என்பதையே இந்த கட்டாய மதமாற்றம் காட்டுகிறது. பாகிஸ்தானின் அரசியல் சாசனம் மீதும் நம்பிக்கை இல்லாமல் இவர்கள் இந்து பெண்களைக் கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்கிறார்கள்” என்றார்.
இப்படி இந்து மதத்தை சேர்ந்த பெண்கள் கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்யபடுவது இது முதல்முறை இல்லை. மேலும், இதற்குமுன் அமைச்சராக இருந்த பலர் இந்த சம்பவத்திற்கு எதிராக குரல் எழுப்பி இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இதுவரை ஊடகங்களின் தரவுப்படி சுமார் 1000 சிறுமிகளும் பெண்களும் கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்யபட்டு இருக்கிறார்கள்.