Sangathy
Sports

பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறுவது யார்? : பெங்களூரு-சென்னை அணிகள் இன்று பலப்பரீட்சை..!

17-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் 10 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும், குறிப்பிட்ட 5 அணிக்கு எதிராக 2 முறையும், 4 அணிக்கு எதிராக ஒரு முறையும் என மொத்தம் 14 ஆட்டங்களில் விளையாட வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறும்.

நடப்பு தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ஐதராபாத் சன் ரைசர்ஸ் ஆகிய அணிகள் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்று விட்டன. மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகிய அணிகள் அடுத்த சுற்று வாய்ப்பை இழ்ந்து விட்டன.

வாழ்வா-சாவா ஆட்டம்

‘பிளே-ஆப்’ சுற்றில் எஞ்சி இருக்கும் ஒரு இடத்தை கைப்பற்றுவது யார் என்பதில் சென்னை சூப்பர் கிங்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் இடையே நீயா? நானா? என்ற போட்டி நிலவுகிறது.

இந்த நிலையில் பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று (சனிக்கிழமை) நடைபெறும் 68-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது. அடுத்த சுற்று தலைவிதியை நிர்ணயிக்கும் இந்த ஆட்டம் இரு அணிக்கும் வாழ்வா-சாவா போராட்டமாகும். முக்கியமான இந்த ஆட்டத்துக்காக இரு அணிகளும் தீவிரமாக தயாராகி இருக்கின்றன.

சென்னை அணி இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றாலோ அல்லது மழையால் ஆட்டம் ரத்தாகி இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி பகிர்ந்து அளிக்கப்பட்டாலோ அடுத்த சுற்றுக்குள் தகுதி பெற்று விடும். ஆனால் பெங்களூரு அணியை பொறுத்தமட்டில் வெற்றி பெற்றால் மட்டும் போதாது. பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்து 200 ரன் எடுத்தால் குறைந்தபட்சம் 18 ரன் வித்தியாசத்திலும், 2-வது பேட்டிங் செய்தால் 200 ரன் இலக்கை 11 பந்துகள் மீதம் வைத்து வெற்றி பெற்றால் மட்டுமே நிகர ரன் ரேட்டில் சென்னை அணியை பின்னுக்கு தள்ளி விட்டு அடுத்த சுற்றுக்குள் நுழைய முடியும்.

பெங்களூரு அணி எப்படி?

பெங்களூரு அணி 13 ஆட்டங்களில் ஆடி 6 வெற்றி, 7 தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்றுள்ளது. அந்த அணியின் நிகர ரன் ரேட் +0.387 ஆக உள்ளது. தனது முதல் 7 ஆட்டங்களில் 6-ல் தொடர்ச்சியாக தோல்வி கண்டு தத்தளித்த பெங்களூரு அணி கடைசி 5 ஆட்டங்களில் தொடர்ச்சியாக வெற்றி பெற்று எழுச்சி கண்டுள்ளது. தொடக்கத்தில் படுமோசமாக இருந்த அந்த அணியின் பந்து வீச்சு இப்போது நல்ல நிலைக்கு திரும்பி இருப்பது கூடுதல் பலமாகும்.

பெங்களூரு அணியில் பேட்டிங்கில் விராட்கோலி சூப்பர் பார்மில் இருக்கிறார். அவர் ஒரு சதம் 5 அரைசதம் உள்பட 661 ரன்கள் சேர்த்து தொடரில் அதிக ரன் குவித்தவருக்கான ஆரஞ்சு நிற தொப்பியை தன்வசம் வைத்துள்ளார். கேப்டன் பாப் டு பிளிஸ்சிஸ் (3 அரைசதம் உள்பட 367 ரன்), ரஜத் படிதார் (5 அரைசதம் உள்பட 320 ரன்), தினேஷ் கார்த்திக் (2 அரைசதம் உள்பட 301 ரன்) ஆகியோரும் நல்ல நிலையில் இருக்கின்றனர். பந்து வீச்சில் யாஷ் தயாள், முகமது சிராஜ், லோக்கி பெர்குசன், ஸ்வப்னில் சிங், கரண் ஷர்மா ஆகியோர் பலம் சேர்க்கிறார்கள். கேமரூன் கிரீன் ஆல்-ரவுண்டராக அசத்தி வருகிறார். 20 ஓவர் உலகக் கோப்பை போட்டிக்கு தயாராகும் பொருட்டு இங்கிலாந்தை சேர்ந்த வில் ஜாக்ஸ் (230 ரன்), ரீஸ் டாப்லே (4 விக்கெட்) ஆகியோர் நாடு திரும்பியது அந்த அணிக்கு பின்னடைவாகும்.

நிலையற்ற சென்னை

5 முறை சாம்பியனான சென்னை அணி 13 ஆட்டங்களில் ஆடி 7 வெற்றி, 6 தோல்வியுடன் 14 புள்ளிகள் பெற்று புள்ளி பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது. அந்த அணியின் நிகர ரன் ரேட் +0.528 ஆக இருக்கிறது. வெளியூரில் இதுவரை 6 ஆட்டத்தில் ஆடி 2-ல் மட்டுமே வெற்றி கண்டு நிலையற்ற ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சென்னை அணி சொந்த மண்ணில் நடந்த முந்தைய லீக் ஆட்டத்தில் ராஜஸ்தானை வீழ்த்திய உற்சாகத்துடன் இந்த ஆட்டத்தில் களம் இறங்குகிறது.

சென்னை அணியில் பேட்டிங்கில் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் (ஒரு சதம், 4 அரைசதம் உள்பட 583 ரன்), டேரில் மிட்செல் (2 அரைசதத்துடன் 314 ரன்) சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். தொடக்க ஆட்டக்காரர் ரச்சின் ரவீந்திரா, ரஹானே ஆகியோர் சொதப்பி வருகிறார்கள்.

அத்துடன் அதிரடி ஆட்டக்காரர் ஷிவம் துபே (3 அரைசதத்துடன் 389 ரன்) கடந்த 4 ஆட்டங்களில் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். பேட்டிங் வலுப்பெற அவர்கள் நிலைத்து நின்று கணிசமான பங்களிப்பை அளிக்க வேண்டியது முக்கியமானதாகும்.

பந்து வீச்சில் துஷர் தேஷ்பாண்டே, ரவீந்திர ஜடேஜா, சிமர்ஜீத் சிங் நம்பிக்கை அளிக்கின்றனர். முஸ்தாபிஜூர் ரகுமான், பதிரானா விலகலால் ஏற்பட்டுள்ள பலவீனத்தை சரிக்கட்ட ஷர்துல் தாக்குர் ஏற்றம் காண வேண்டியது அவசியமானதாகும்.

பெங்களூருவுக்கு எதிரான தொடக்க லீக் ஆட்டத்தில் சென்னை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் கூடுதல் நம்பிக்கையுடன் களம் காணும் சென்னை அணி தனது ஆதிக்கத்தை தொடர்ந்து அடுத்த சுற்றுக்குள் அடியெடுத்து வைக்க மல்லுக்கட்டும்.

அதேநேரத்தில் முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுத்து அடுத்த சுற்று வாய்ப்பை உறுதி செய்து உள்ளூர் ரசிகர்களை குஷிப்படுத்த பெங்களூரு அணி எல்லா வகையிலும் வரிந்து கட்டும்.

எனவே இந்த ஆட்டத்தில் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெங்களூரு ஆடுகளம் பேட்டிங்குக்கு அனுகூலமானது என்பதால் ரன் மழையையும் எதிர்பார்க்கலாம்.

இவ்விரு அணிகளும் இதுவரை 32 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் சென்னை அணி 21 முறையும், பெங்களூரு அணி 10 தடவையும் வென்று இருக்கின்றன. ஒரு ஆட்டம் முடிவு இல்லாமல் போனது.

இரவு 7.30 மணிக்கு…

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

பெங்களூரு: விராட் கோலி, பாப் டு பிளிஸ்சிஸ் (கேப்டன்), மேக்ஸ்வெல், ரஜத் படிதார், மஹிபால் லோம்ரோர், கேமரூன் கிரீன், தினேஷ் கார்த்திக், ஸ்வப்னில் சிங் அல்லது யாஷ் தயாள், கரண் ஷர்மா, முகமது சிராஜ், லோக்கி பெர்குசன்.

சென்னை: ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல், ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, சமீர் ரிஸ்வி அல்லது ஷர்துல் தாக்குர், டோனி, மிட்செல் சான்ட்னெர், தீக்ஷனா, துஷர் தேஷ்பாண்டே, சிமர்ஜீத் சிங்.

இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

Related posts

ஐ.பி.எல். 2024 பஞ்சாப் – மும்பை அணிகளிடையான மோதல் இன்று..!

tharshi

Aaqil powers St. Anthony’s to semi-final

Lincoln

Saqib Mahmood marks injury comeback with three wickets in Lions win

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy