மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் இரு கட்டங்களாக நடைபெறுகிறது. முதற்கட்டத் தேர்தல் ஏப்ரல் 23 அன்று நடைபெற்ற நிலையில், இரண்டாம் கட்டத் தேர்தல் ஏப்ரல் 29 அன்று நடைபெறவுள்ளது. இதற்கான தேர்தல் பிரசாரம் நாளை மறுதினம் (27) மாலை 6 மணியுடன் நிறைவு பெறுகின்றது.
இதனைத் தொடர்ந்து, மேற்கு வங்கத்தில் நடைபெறும் பா.ஜ.க. பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்கச் சென்ற பிரதமர் நரேந்திர மோடி, நேற்று அங்குள்ள கங்கையின் கிளை நதியான ஹூக்ளி நதியில் படகுசவாரி செய்தார்.
இதனைக் கேலியாக விமர்சித்த மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, ‘கங்கை நதி தூய்மையாக இருப்பதால் பிரதமர் நன்றாக படகுசவாரி செய்கிறார். இதேபோல, அவர் யமுனை நதியில் படகுசவாரி செய்யமுடியுமா?’ என்று கேள்வி எழுப்பினார்.
ஹெளரா பகுதியில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட மமதா பானர்ஜி அங்கு பேசுகையில், ‘இது தேர்தல் அரசியல். நீங்கள் கங்கையில் படகு சவாரி செய்தீர்கள், நல்லது. அதனை வரவேற்கிறோம். நானுமே கங்கைக்குச் செல்வேன்.
ஆனால், நான் உங்களுக்கு சவால் விடுக்கிறேன். நீங்கள் டில்லியின் யமுனை நதிக்குச் சென்று நீராடுவீர்களா?
டில்லியின் யமுனை முற்றிலும் மாசுபட்டுள்ளது. டில்லியிலுள்ள யமுனை நதியை உங்களால் சரிவர பாதுகாக்க முடியவில்லை. ஆனால், எங்களின் கங்கைக்கு வந்து புகைப்படம் எடுக்கிறீர்கள்.
மேற்கு வங்கத்தின் கங்கையையும் டில்லியின் யமுனையையும் பிரதமர் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். நமது கங்கை சுத்தமானது. அதனால்தான், பிரதமர் படகு சவாரி செய்தார். இது அரசியல் ஆதாயத்திற்காக புகைப்படங்கள் எடுக்க ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வு’ என்று விமர்சித்தார்.
இதுமட்டுமின்றி, ஜால்முரி பகுதியில் ஒரு கடையில் நின்று பிரதமர் மோடி பொருள்கள் வாங்கியமை பற்றி பேசிய மமதா, ‘அது முற்றிலும் அரங்கேற்றப்பட்ட ஒரு நாடகம். பிரதமர் தன் பையில் 10 ரூபாய் நோட்டை எடுத்துச் செல்கிறார் என்பதை நம்ப முடிகிறதா?
நீங்கள் உண்மையிலேயே மேற்கு வங்கத்தை நேசித்தால் எங்களின் மீன் சாதத்தை ஒருமுறை சுவைத்துப் பாருங்கள். நான் உங்களுக்கு அதனை சமைத்துத் தருகிறேன்’ என்று தெரிவித்தார்.
அதேபோல, திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் அபிஷேக் பானர்ஜி பிரதமர் மோடியை மேற்கு வங்கத்தின் விளம்பரத் தூதர் என்று விமர்சித்துள்ளார்.
