மேற்கு வங்கத்தில் பாஜக வேட்பாளரின் இல்லத்திற்கு வெளியே நடந்த துப்பாக்கிச் சூட்டில் மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர் காயமடைந்தார்.
மேற்கு வங்க மாநிலம், பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள பட்பாராவில், பாஜக வேட்பாளர் பவன் சிங்கின் இல்லத்திற்கு வெளியே நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு துப்பாக்கிச்சூடு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவத்தில் மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் காயமடைந்தார்.
காயமடைந்த வீரர், மூத்த பாஜக தலைவர் அர்ஜுன் சிங்கின் மகனான பவன் சிங்கின் பாதுகாப்புப் பிரிவில் பணியாற்றி வந்தவர் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும், அவரின் காலில் துப்பாக்கிக் குண்டு காயம் ஏற்பட்டு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இதையடுத்து இந்தச் சம்பவம் குறித்து தேர்தல் ஆணையம் அறிக்கை கோரியுள்ளது. ஆனால் துப்பாக்கிச் சூடு நடத்தியது யார் என்பது இன்னும் கண்டறியப்படவில்லை என பொலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.
294 உறுப்பினர்களைக் கொண்ட மேற்கு வங்க சட்டப் பேரவைக்கு இரு கட்டத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. முதல் கட்டமாக 152 தொகுதிகளுக்கு கடந்த ஏப். 23 ஆம் திகதி பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு நடைபெற்றது. இரண்டாவது மற்றும் இறுதிக்கட்டமாக 142 தொகுதிகளுக்கு நாளைமறுதினம் 29ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
2ஆம் கட்ட தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்வு பெறுகிறது. இதையொட்டி ஆளும் திரிணமூல், எதிர்க்கட்சிகளான பாஜக, காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள் உள்ளிட்ட கட்சியினர் இறுதிகட்ட சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
