1.4 கிலோ கஞ்சா கடத்திய குற்றத்திற்காக 34 வயதான பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த புல் வெட்டும் தொழிலாளிக்கு ஷா ஆலம் உயர் நீதிமன்றம் 30 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 12 பிரம்படிகளும் விதித்து தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2020ஆம் ஆண்டு டிசம்பர் 4ஆம் திகதி, ஸ்ரீ கெம்பாங்கான், தாமான் ஈக்வைன் பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பில் 1,404.3 கிராம் கஞ்சா கடத்தியதாக அலி சஜ்ஜாத் என்பவர் கைது செய்யப்பட்டார். அவர் மீது அபாயகரமான போதைப்பொருள் சட்டம் 1952, பிரிவு 39B(1)(a)ன் கீழ் குற்றம் சுமத்தப்பட்டது.
குற்றம் சாட்டப்பட்டவர் அந்த போதைப்பொருள் தன்னுடையது அல்ல என்று கூறிய போதிலும், அதை நிரூபிக்க போதுமான சான்றுகளை சமர்ப்பிக்கவில்லை. அவரது தற்காப்பு வெறும் மறுப்பாகவே இருந்தது என்று, நீதிபதி டத்தோ ஸ்ரீ லத்தீபா முகமது தாஹர் தனது தீர்ப்பில் குறிப்பிட்டார்:
மேலும் இந்த வழக்கில் அரசுத் தரப்பில் 6 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். ஆனால் தற்காப்புத் தரப்பில் அலி சஜ்ஜாத் மட்டுமே சாட்சியம் அளித்தார். அவருடன் தங்கியிருந்ததாகக் கூறப்படும் மற்ற நபர்கள் சாட்சியளிக்க அழைக்கப்படவில்லை.
மலேசியாவில் கட்டாய மரண தண்டனை நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, நீதிமன்றம் அவருக்கு 30 ஆண்டுகள் சிறை மற்றும் 12 பிரம்படி தண்டனையை வழங்கியது. இந்த சிறைக்காலம் அவர் கைது செய்யப்பட்ட தேதியான டிசம்பர் 4, 2020 முதல் கணக்கிடப்படும்.
‘குற்றம் சாட்டப்பட்டவர் போதைப்பொருள் தனது சொந்த பயன்பாட்டிற்காக வைத்திருந்ததாகக் கூறினாலும், கடத்தல் நோக்கமில்லை என்பதை நிரூபிக்கத் தவறிவிட்டார். 1.4 கிலோ என்பது ஒரு பெரிய அளவாகும்’ என்று நீதிபதி டத்தோ ஸ்ரீ லத்தீபா முகமட் தாஹர் கூறினார்.
நீதிமன்றத்தில் அலி சஜ்ஜாத் கண்ணீர் மல்க பேசுகையில், ‘நான் ஒரு ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவன். எனது தாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மலேசியாவில் கடந்த 8 ஆண்டுகளாக நான் உழைத்து சம்பாதித்த பணம் எதுவும் சட்டவிரோதமான வழியில் வந்தது அல்ல. தயவுசெய்து எனக்குக் குறைந்தபட்ச தண்டனை வழங்குங்கள்,’ என்று கோரிக்கை விடுத்தார்.
இருப்பினும், அரசுத் தரப்பு வழக்கறிஞர் முகமட் ஹைகல் இஸ்மாயில், போதைப்பொருள் குற்றங்கள் நாட்டின் முதல் எதிரி என்றும், வெளிநாட்டவர்கள் நாட்டின் சட்டத்தை மதிக்க வேண்டும் என்றும் கூறி மரண தண்டனைக்கு வலியுறுத்தினார். அலி சஜ்ஜாத் போதைப்பொருள் விற்ற பணத்தைத்தான் பாகிஸ்தானுக்கு அனுப்பினார் என்றும் அவர் வாதிட்டார்.
தற்போது இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், அலி சஜ்ஜாத் தனது தண்டனையை அனுபவிக்க சிறைக்கு அனுப்பப்பட்டார்.

