சட்டவிரோத கடற்றொழில் காரணமாக, முல்லைத்தீவு நந்திக்கடல் களப்புப் பகுதியில் நேற்று சனிக்கிழமைகாலை இடம்பெற்ற மோதல் சம்பவத்தில், மூவர் காயமடைந்துள்ளனர்.
நீராவிப்பிட்டியைச் சேர்ந்த முஸ்லிம் சமூகத்தை சேர்ந்தவருக்கும், கள்ளப்பாடு பகுதியைச் சேர்ந்த தமிழ் சமூகத்தினருக்கும் இடையே, சட்டவிரோத தொழில் தொடர்பில் ஏற்பட்ட வாக்குவாதம், பின்னர் கடுமையான முரண்பாடாக மாறி தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவத்தில், கள்ளப்பாடு பகுதியை சேர்ந்த 33 மற்றும் 49 வயது மதிக்கத்தக்க இருவர், தாக்குதலுக்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில், முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், நீராவிப்பிட்டியை சேர்ந்த 28 வயதுடைய இளைஞனும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவத்தை அவதானித்த நபர்கள், பொலிஸாருக்கு அறிவித்ததை தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், சந்தேகத்தின் அடிப்படையில் இருவரை கைது செய்தவேளை, ஏனையவர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் கருத்து வெளியிட்ட, முல்லைத்தீவு மாவட்ட மீனவ சங்கங்களின் மாவட்டத் தலைவர் அன்னலிங்கம் நடனலிங்கம்,
“கடற்றொழில் நீரியல் வளத்திணைக்களம், சட்டவிரோத தொழிலை முறையாக கட்டுப்படுத்தியிருந்தால், இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றிருக்காது” என குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்த நிலையில், முள்ளியவளை பொலிஸார், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
